தந்தை
2:200    فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏
2:200. ஆகவே, உங்களுடைய (ஹஜ்) கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்தது போல், அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; அதனால், அவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை.
2:215   يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்: "எதை, (யாருக்கு)ச் செலவு செய்யவேண்டும்?" என்று; நீர் கூறும்: "நல்லவற்றிலிருந்து (நன்மையை நாடி) எதனை நீங்கள் செலவு செய்தாலும் அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (கொடுங்கள்); மேலும், நீங்கள் நன்மையிலிருந்து எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."
2:233   وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ‌ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ‌ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ‌ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
2:233. (தங்களுடைய குழந்தைகளுக்கு, விவாகரத்து சொல்லப்பட்ட தம்மனைவியர்களைக் கொண்டே) பாலூட்டுவதைப் பூர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) சிரமம் கொடுக்கப்படமாட்டாது; தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும், தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்பட மாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது; இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை; மேலும், உங்களுடைய குழந்தைகளுக்கு (செவிலித்தாயைக் கொண்டு பாலூட்ட விரும்பினால்) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்துவிட்டால் உங்கள் மீது குற்றமாகாது; அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
4:12   وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ‌ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ‌ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ‌ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏
4:12. இன்னும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதிபாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால், அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால்பாகம் தான்; (இதுவும்) அவர்கள் செய்திருக்கின்ற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர, உங்களுக்குப் பிள்ளை இல்லாதிருப்பின் நீங்கள் விட்டுச்சென்றதிலிருந்து, அவர்களுக்குக் கால்பாகம் தான், உங்களுக்குப் பிள்ளையிருந்தால் அப்போது, அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒருபாகம் தான், (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்; அனந்தரம்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ (இறந்து) - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒருபாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் கூட்டாளிகளாவார்கள்; (இதுவும்) அவர்களின் மரண சாசனமும், கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால், (மரண சாஸனம் வாரிசுகள் எவருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்; இது) அல்லாஹ்வின் கட்டளையாகும்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:22   وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا‏
4:22. முன்னர் நடந்துபோனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்துகொள்ளாதீர்கள்; நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.
4:23   حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். இன்னும், நீங்கள் எவர்களுடன் உடலுறவு கொண்டீர்களோ அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முதற்கணவனுக்குப் பிறந்து) உங்கள் மடிகளில் (பாதுகாப்பில்) இருந்துவரும் உங்களுடைய (மனைவியரின்) புதல்விகளும் (உங்களுக்கு விலக்கப்பட்டவர்கள்). ஆனால், அவர்களுடன் நீங்கள் உடலுறவு கொள்ளவில்லையானால் (அவர்களை விலக்கி முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்துகொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் (நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது). இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது (விலக்கப்பட்டது) - இதற்குமுன் நடந்து விட்டவை தவிர. (அவை அறியாமையால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கிறான்.
4:33   وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ‌ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
4:33. இன்னும், பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் செல்கின்ற (செல்வத்)திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை, ஒவ்வொருவருக்கும், நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான்.
4:36   وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏
4:36. மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை நேசிப்பதில்லை.
5:104   وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا‌ ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏
5:104. "அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்!" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்).
9:23   يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَـكُمْ اَوْلِيَآءَ اِنِ اسْتَحَبُّوا الْـكُفْرَ عَلَى الْاِيْمَانِ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
9:23. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையைவிட நிராகரிப்பை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
9:24   قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
9:24. (நபியே!) நீர் கூறும்: "உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும் - அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் போர்புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவரும் வரை, நீங்கள் எதிர்பார்த்து இருங்கள்; அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்துவதில்லை."
9:114   وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏
9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதிக்காகவே அன்றி வேறில்லை; அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது அவருக்குத் தெளிவாகியதும், அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இளகிய மனம் உடையவராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும் இருந்தார்.
12:4   اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏
12:4. யூஸுஃப் தம் தந்தையிடம், "என் அருமைத் தந்தையே! நிச்சயமாக நான், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் (கனவில்) கண்டேன்; (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்" என்று கூறியபொழுது.
12:8   اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ  ؕ اِنَّ اَبَانَا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنِ ‌ۖ ‌ۚ‏
12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்): "யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மை விட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர்; நாமோ (பலமுள்ள) ஒரு கூட்டத்தினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார்" என்று அவர்கள் கூறியதை (நினைவூட்டுவீராக)!
12:9   اۨقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَـكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَ تَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ‏
12:9. "யூஸுஃபைக் கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு பூமியில் எறிந்து விடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன் பின் நீங்கள் நல்ல மக்களாக ஆகிவிடுவீர்கள்" (என்று கூறிக்கொண்டார்கள்).
12:11   قَالُوْا يٰۤاَبَانَا مَا لَـكَ لَا تَاْمَنَّا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ‏
12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? நிச்சயமாக அவருக்கு நாங்கள் நன்மையை நாடுபவராக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
12:16   وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً يَّبْكُوْنَؕ‏
12:16. இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுதுகொண்டே வந்தார்கள்.
12:17   ‌قَالُوْا يٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ‌ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ‏
12:17. "எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, போட்டியிட்டு ஓடிக்கொண்டே (வெகுதூரம்) சென்றுவிட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்றுவிட்டது. ஆனால், நாங்கள் உண்மையே சொன்னபோதிலும், நீங்கள் எங்களை நம்பவேமாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.
12:59   وَ لَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِىْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ‌ۚ اَلَا تَرَوْنَ اَنِّىْۤ اُوْفِی الْكَيْلَ وَاَنَا خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்)களைச் சித்தம் செய்துகொடுத்தபோது, (அவர்களை நோக்கி) "உங்கள் தந்தை வழிச்சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்குவரும் போது) என்னிடம் அழைத்துவாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை) நிரம்பமாக அளந்துகொடுக்கிறேன்; விருந்தோம்பல் செய்வதில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கூறினார்.
12:61   قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفَاعِلُوْنَ‏
12:61. "அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் முயற்சிகளை மேற்கொள்வோம்! மேலும், நிச்சயமாக நாம் அதைச் செய்பவர்கள் தான்" என்று கூறினார்கள்.
12:63   فَلَمَّا رَجَعُوْۤا اِلٰٓى اَبِيْهِمْ قَالُوْا يٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏
12:63. அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, அவரை நோக்கி: "எங்கள் தந்தையே! (நாங்கள் எங்கள் சகோதரரை அழைத்துச்செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்துகொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே, எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள்; நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக்கொண்டுவருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாகப் பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்.
12:65   وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْؕ قَالُوْا يٰۤاَبَانَا مَا نَـبْغِىْؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا‌ ۚ وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍ‌ؕ ذٰ لِكَ كَيْلٌ يَّسِيْرٌ‏
12:65. அவர்கள் தங்கள் சாமான் (மூட்டை)களை அவிழ்த்தபோது, அவர்களுடைய (கிரயப்)பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப்பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்குமேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ நம்முடைய (கிரயப்)பொருள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே, நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கிவருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகச் (சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டுவருவோம்; இது சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
12:68   وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕمَا كَانَ يُغْنِىْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍ اِلَّا حَاجَةً فِىْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰٮهَا‌ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
12:68. அவர்கள், தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்டபடி (எகிப்திற்குள்) நுழைந்தபோது, யஃகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை - அதை அவர் நிறைவேற்றிவிட்டார் என்பதைத் தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அவர்களைவிட்டும் அவர் தடுத்து விடுபவராக இருக்கவில்லை; நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சியு)டையவராக இருக்கின்றார்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
12:78   قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَيْخًا كَبِيْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
12:78. அவர்கள் (யூஸுஃபை நோக்கி), "இந்நாட்டின் அமைச்சரே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே, அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும். நிச்சயமாக நாங்கள் உம்மை உபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம்" என்று கூறினார்கள்.
12:80   فَلَمَّا اسْتَايْــٴَــسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا‌ ؕ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِىْ يُوْسُفَ‌ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَاْذَنَ لِىْۤ اَبِىْۤ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِىْ‌ ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ‏
12:80. எனவே, அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுள் பெரியவர் சொன்னார்: "நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும், முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்துவிட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரை நான் இந்த பூமியைவிட்டு, ஒருபோதும் அகலவே மாட்டேன். தீர்ப்பளிப்போரில் அவன்தான் மிகவும் மேலானவன்."
12:81   اِرْجِعُوْۤا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ‌ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ‏
12:81. "ஆகவே, நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, 'எங்களுடைய தந்தையே! நிச்சயமாக உங்கள் மகன் திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை' என்று கூறுங்கள்."
12:93   اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًا‌ۚ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ‏
12:93. "என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் (எடுத்துக்) கொண்டுசென்று, என் தந்தையின் முகத்தில் அதனைப் போடுங்கள்; அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார்; இன்னும், உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டுவாருங்கள்" (என்று கூறினார்).
12:94   وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّىْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ‌ لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏
12:94. (அவர்களுடைய) ஒட்டகக் கூட்டம் (எகிப்தை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, "நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!" என்றார்.
12:97   قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ‏
12:97. (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
12:99   فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَؕ‏
12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய், தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக்கொண்டார்; இன்னும், "அல்லாஹ் நாடினால் நீங்கள் எகிப்துக்குள் அச்சமற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் கூறினார்.
12:100   وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا‌ۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّا‌ؕ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْ‌ؕ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُ‌ؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
12:100. இன்னும், அவர் தம் தாய், தந்தையரைச் சிம்மாசனத்தின்மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும் அக்காலத்திய முறைப்படி) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம்பணிந்து வீழ்ந்தனர்: அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இதுதான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கிவிட்டான்: மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன், எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிவிட்ட பின்னர், உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டுவந்ததன் மூலம், அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.
13:23   جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ‌ۚ‏
13:23. நிலையான (அந்த) சுவர்க்கப் பதிகளாகும்; அதில் இவர்களும், இவர்களுடைய பெற்றோரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்களுடைய சந்ததியினரில், யார் நல்லவர்களாக இருந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் நுழைவார்கள்.
16:35   وَقَالَ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍ‌ؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ فَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
16:35. "அல்லாஹ் நாடியிருந்தால், அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்" என்று இணைவைப்போர் கூறுகின்றனர்; இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே, (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுத்துவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது (பொறுப்பு) உண்டா? (இல்லை!)
18:80   وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا‌ۚ‏
18:80. "(அடுத்து) அந்தச் சிறுவன் - அவனுடைய தாய், தந்தையர் இருவரும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் சேர்த்துவிடுவான் என்று நாம் பயந்தோம்."
18:82   وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ  رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ‏
18:82. "(நான் நிமிர்த்து வைத்த) அந்தச் சுவர், அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்து தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்து)க் கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான்; உம் இறைவனிடமிருந்துள்ள அருளாக! இதனை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை; எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இதுதான்."
19:28   يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ۖ‌ ۚ‏
19:28. "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
19:42   اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا‏
19:42. "என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத, உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்யாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
19:43   يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا‏
19:43. "என் அருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."
19:44   يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ‌ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا‏
19:44. என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன்.
21:52   اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِىْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ‏
21:52. அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும், "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்டபோது,
24:31   وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
24:31. இன்னும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்; தங்கள் அலங்காரத்தை - அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும், தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்; மேலும் (நம்பிக்கையாளர்களான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்.
24:61   لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا‌ ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது தாய்மார் வீடுகளிலோ, அல்லது சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டினுடைய சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்), அல்லது உங்கள் தோழரிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை; நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால், நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியமிக்க பரிசுத்தமான காணிக்கையாக (அஸ்ஸலாமு அலைக்கும் என்று) நீங்கள் உங்களுக்குள் முகமன் கூறிக்கொள்ளுங்கள்: நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
26:70   اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ‏
26:70. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது.
26:86   وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ‏
26:86. "என் தந்தையையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழிகெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்."
28:23   وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ  وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ‌ ۚ قَالَ مَا خَطْبُكُمَا‌ ؕ قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ‌ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ‏
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) தடுத்துநிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்: "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு, "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும்வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்டமுடியாது; மேலும், எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:25   فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ  قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا‌ ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ‌ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விருவரில் ஒருத்தி நாணத்துடன் நடந்து அவரிடம் வந்து, "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக நிச்சயமாக என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினாள்; இவ்வாறாக (மூஸா) அவரிடம் வந்தபோது, தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர், "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரைவிட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்.
28:26   قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ‌ اِنَّ خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ‏
28:26. அவ்விருவரில் ஒருத்தி, "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் மிகவும் மேலானவர் (இவர்) பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்" என்று கூறினாள்.
29:8   وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا‌ ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வலியுறுத்தியிருக்கின்றோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
33:5   اُدْعُوْهُمْ لِاٰبَآٮِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ‌ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْ‌ؕ وَ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَاۤ اَخْطَاْ تُمْ بِهٖۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
33:5. எனவே, நீங்கள் எடுத்து வளர்த்த அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள்: அதுவே, அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்: ஆனால், அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்: முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய உள்ளங்கள் வேண்டுமென்றே செய்கின்ற ஒன்றுதான் (உங்கள்மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:40   مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
33:40. முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
33:50   يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரைக் கொடுத்துவிட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்துவந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய மகள்களையும், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்களையும், உம் தாயின் சகோதரருடைய மகள்களையும், உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம்; அன்றியும், நம்பிக்கைகொண்ட ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது, மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியேகமாக உள்ளதாகும்; (மற்ற நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும் அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்: உமக்கு ஏதும் சிரமம் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதிவிலக்களித்தோம்); மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
33:55   لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِىْۤ اٰبَآٮِٕهِنَّ وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآٮِٕهِنَّ وَلَا مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ ۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا‏
33:55. (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள் தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள்மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
37:17   اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَؕ‏
37:17. "அவ்வாறே, முந்தைய நம் மூதாதையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்?)" என்றும் கேட்கின்றனர்.
37:85   اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ‌ۚ‏
37:85. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?" எனக் கேட்டபோது.
37:102   فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏
37:102. பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது, அவர் கூறினார்: "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவுகண்டேன்; இதைப் பற்றி உம் கருத்து என்ன, என்பதைச் சிந்திப்பீராக!" (அதற்கு மகன்) கூறினார்: "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்; அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகவே காண்பீர்கள்."
43:26   وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِىْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ‏
43:26. அன்றியும் இப்ராஹீம் தம் தந்தையையும் தம் சமூகத்தவர்களையும் நோக்கி: "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றைவிட்டும் விலகிக்கொண்டேன்" என்று கூறியதையும்
56:48   اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ‏
56:48. அல்லது, முன்னோர்களான நம் தந்தையரும்?" (எழுப்பப்படுவர்? என்றும் கூறினர்.)
60:4   قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
60:4. இப்ராஹீமிடமும் அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களைவிட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக்கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்துவிட்டோம்; அன்றியும், (ஏகனான) அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டுவிட்டன" என்றார்கள்; ஆனால், இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: "அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தியில்லை; ஆயினும், உமக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத்தவிர - (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது; அன்றியும், அவர் கூறினார்): "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது."
80:35   وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏
80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்