பொறுமை
2:45 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ
2:45. மேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி (மற்றவர்களுக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும்.
2:115 وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ
2:115. கிழக்கும், மேற்கும், அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான்.
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால், புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும், வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும், அடிமைகளின் மீட்புக்காகக் கொடுத்தவரும்; இன்னும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து, இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், பொறுமையுடன் இருந்தவர்களுமாவர்; அத்தகையோர்தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள்.
2:249 فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
2:249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது அவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக்கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ, அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தம் கரத்தினால் ஒரு சிறங்கை(த் தண்ணீரை) அள்ளியவரைத் தவிர; யார் அதிலிருந்து (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர், அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் அதனைக் கடந்ததும், (அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் (போர் செய்வதற்கு) எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வை சந்திப்போம் என்று உறுதிகொண்டிருந்தோர், "எத்தனையோ சிறுகூட்டத்தினர், பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் அனுமதிகொண்டு வென்றிருக்கிறார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
2:250 وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ
2:250. மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் வெளிப்பட்டபோது, "எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! நிராகரிக்கும் (இக்)கூட்டத்துக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்)தனர்.
3:120 اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ
3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்; நீங்கள் பொறுமையாக இருந்து (அல்லாஹ்வை) அஞ்சினால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
3:125 بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ
3:125. ஆம்! நீங்கள் பொறுமையுடனிருந்து, (அல்லாஹ்வைப்) பயந்தால், திடீரென அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் - உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவிபுரிவான்.
3:142 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர்புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல், நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களா?
3:146 وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ
3:146. மேலும், எத்தனையோ நபிமார்கள் - அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை; பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:200 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
3:200. நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக்கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
4:5 وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَـكُمُ الَّتِىْ جَعَلَ اللّٰهُ لَـكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا
4:5. (அநாதைகள்) அறிவீனர்களாக இருப்பின், அவர்களிடம் (அவர்களின் வாழ்க்கைக்கு) ஆதாரமாக உங்களிடம் அல்லாஹ் ஆக்கி வைத்துள்ள (அவர்களுக்குச் சொந்தமான) உங்களிடமுள்ள செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கவேண்டாம்; எனினும் அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அணிவியுங்கள், இன்னும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளையே கூறுங்கள்.
4:25 وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ ؕ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ؕ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَ تَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ ذٰ لِكَ لِمَنْ خَشِىَ الْعَنَتَ مِنْكُمْ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
4:25. உங்களில் எவருக்கு சுதந்திரமுள்ள நம்பிக்கை கொண்ட பெண்களை விவாகம் செய்துகொள்ள சக்தியில்லையோ அவர்கள், நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்); அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கு அறிகிறவன்; உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே, (அடிமைப் பெண்களாகிய) அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதிகொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள்; அவர்களுக்குரிய மஹரை முறைப்படி அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; (அப்பெண்கள்) பத்தினிகளாகவும், விபசாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்கவேண்டும்; எனவே, அவர்கள் திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடானதை செய்துவிட்டால் (திருமணமாகாத) சுதந்திரமான பெண்கள்மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்படும்; (அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்யும்) இது, உங்களில் விபசாரத்தை அஞ்சுபவருக்குத்தான்; எனினும், நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும், அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணை உடையோனாகவும் இருக்கிறான்.
6:34 وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاِى الْمُرْسَلِيْنَ
6:34. உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர்; அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும் அவர்கள் பொறுத்துக் கொண்டனர்: அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுகிறவர் எவரும் இல்லை: (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் (இத்தகைய) செய்தி உம்மிடம் வந்தேயிருக்கின்றது.
7:87 وَاِنْ كَانَ طَآٮِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِىْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآٮِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَا ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ
7:87. உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறவர்களாகவும், இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பாதவர்களாகவும் இருந்தால் - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள்: அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" (என்றும் கூறினார்).
7:126 وَمَا تَـنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ
7:126. "எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழிவாங்குகிறாய்?" (என்று ஃபிர்அவ்னிடம் கூறி,) "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்களை மரணிக்கச் செய்வாயாக!" (எனப் பிரார்த்தித்தனர்.)
7:128 قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும், பொறுமையாகவும் இருங்கள்: நிச்சயமாக (இந்தப்) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம்; தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அதை உரியதாக்கி விடுகின்றான்; இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுபவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.
7:137 وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ
7:137. எனவே, எவர்கள் பலவீனர்களாகக் கருதப்பட்டார்களோ அத்தகைய சமூகத்தினரை, எதில் நாம் பாக்கியம் அளித்திருந்தோமோ அத்தகைய பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், அதன் மேற்குப் பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம்; இஸ்ராயிலின் மக்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி (நிறைவேறி)விட்டது; மேலும், ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உற்பத்தி செய்திருந்தவற்றையும், மிக உயரமாக அவர்கள் எழுப்பியிருந்த (மாடமாளிகைகள் போன்ற)வற்றையும் நாம் தரைமட்டமாக்கிவிட்டோம்.
8:46 وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ
8:46. இன்னும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் உங்களுக்குள் முரண்படாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக்கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான்.
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
8:65. நபியே! நீர் நம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொள்வார்கள்; இன்னும், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் நிராகரிப்பவர்களிலிருந்து ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்: (இது) நிச்சயமாக அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருக்கின்ற காரணத்தினாலாகும்.
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًاؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து இப்பொழுது அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கிவிட்டான்; எனவே, உங்களில் பொறுமையுடைய நூறுபேர் இருந்தால், அவர்கள் இருநூறுபேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால், அல்லாஹ்வின் உத்தரவுக் கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது அவர்கள் வெற்றி கொள்வார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
11:11 اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
11:11. (ஆனால், துன்பங்கள் ஏற்படும் நேரத்தில்) எவர்கள் பொறுமையாய் இருந்து நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களைத் தவிர; அத்தகையோர் - அவர்களுக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்) கூலியும் உண்டு.
11:49 تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهَاۤ اِلَيْكَۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ فَاصْبِرْ ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ
11:49. (நபியே! உமக்கு) இது மறைவான செய்திகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கிறோம்; நீரும் உம்முடைய கூட்டத்தினரும் இதற்குமுன் இதனை அறிந்திருக்கவில்லை; ஆகவே, (உமக்கு ஏற்படும் துன்பங்களில்) பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு (நம்மை) அஞ்சுவோருக்கே!
11:115 وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
12:18 وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ
12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; "இல்லை, உங்களுடைய மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது; எனவே, (எனக்கு இந்நிலையில்) அழகிய பொறுமையை மேற்கொள்வதே (நலமாக இருக்கும்); மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்" என்று கூறினார்.
12:90 قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
12:90. (அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபா?" என்று கேட்டார்கள்; "(ஆம்!) நான்தான் யூஸுஃப்; (இதோ!) இவர் என்னுடைய சகோதரர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள்மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனை) அஞ்சி பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ, (அத்தகைய) நன்மைசெய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார்.
13:22 وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; இத்தகையோருக்கே மறுமையின் (சுவனபதி என்னும்) வீடு இருக்கிறது.
13:24 سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ
13:24. "நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக, உங்கள்மீது சாந்தி உண்டாவதாக! எனவே, மறுமையின் வீடு (உங்களுக்கு) மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறுவார்கள்).
14:12 وَمَا لَـنَاۤ اَلَّا نَـتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰٮنَا سُبُلَنَاؕ وَلَــنَصْبِرَنَّ عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَاؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ
14:12. நாங்கள் அல்லாஹ்வின் மீது சாராதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் (நாங்கள் வெற்றிபெறும்) வழிகளையும் எங்களுக்குக் காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்வோம்; சார்ந்திருப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்" (என்றும் கூறினார்கள்.)
14:21 وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْـتُمْ مُّغْـنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَىْءٍؕ قَالُوْا لَوْ هَدٰٮنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْؕ سَوَآءٌ عَلَيْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَــنَا مِنْ مَّحِيْصٍ
14:21. அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு, மறுமை நாளில்) அல்லாஹ்வுக்கு முன்னே நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி: "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின்தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையேனும் எங்களைவிட்டும் நீங்கள் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக்காட்டினால், நாங்கள் (அவ்வழியை) உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியேயின்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கைசேதப்பட்டுக்) கூறுவார்கள்.
16:26 قَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَى اللّٰهُ بُنْيَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰٮهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ
16:26. நிச்சயமாக இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டடத்தை அடிப்படையோடு பெயர்த்துவிட்டான்; ஆகவே, அவர்களுக்கு மேலே இருந்து 'முகடு' அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்துகொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
16:42 الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
16:42. இவர்கள்தாம் (உலக வாழ்வில்) பொறுமையை மேற்கொண்டார்கள்; இன்னும், தங்கள் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
16:96 مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍؕ وَلَـنَجْزِيَنَّ الَّذِيْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
16:96. உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்து விடும்; அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும்; பொறுமையைக் கடைப்பிடித்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
16:110 ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
16:110. இன்னும், எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கு(ம்) உட்படுத்தப்பட்ட பின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ) பின்பு, அறப்போர் புரிந்தார்களோ, இன்னும் - பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
16:127 وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِىْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ
16:127. (நபியே!) இன்னும், நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும், நீர் பொறுமையுடன் இருப்பது அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை; அவர்களுக்காக நீர் கவலைப்படவும் வேண்டாம்; அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன)நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
18:67 قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا
18:67. (அதற்கவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!" என்று கூறினார்.
18:68 وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا
18:68. (ஏனெனில்,) "எதைப்பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!" (என்று கேட்டார்.)
18:69 قَالَ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِىْ لَكَ اَمْرًا
18:69. (அதற்கு மூஸா,) "அல்லாஹ் நாடினால் பொறுமையுள்ளவனாகவே என்னை நீர் காண்பீர்; எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யமாட்டேன்" என்று சொன்னார்.
18:72 قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا
18:72. (அதற்கு அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா?" என்றார்.
18:75 قَالَ اَ لَمْ اَ قُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا
18:75. (அதற்கு அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா?" என்று கூறினார்.
18:78 قَالَ هٰذَا فِرَاقُ بَيْنِىْ وَبَيْنِكَ ۚ سَاُنَـبِّئُكَ بِتَاْوِيْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَيْهِ صَبْرًا
18:78. "இதுதான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்" என்று அவர் கூறினார்.
18:82 وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ
18:82. "(நான் நிமிர்த்து வைத்த) அந்தச் சுவர், அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்து தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்து)க் கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான்; உம் இறைவனிடமிருந்துள்ள அருளாக! இதனை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை; எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இதுதான்."
19:65 رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا
19:65. "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான்; ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகிப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மையில்) அவனுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?"
20:130 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى
20:130. ஆகவே, (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக்கொள்வீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவு நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக! இன்னும், பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்வீராக! இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்திபெறலாம்.
20:132 وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ؕ لَا نَسْــٴَــلُكَ رِزْقًا ؕ نَحْنُ نَرْزُقُكَ ؕ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰى
20:132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு நீர் ஏவுவீராக! இன்னும், அதன் மீது நீரும் நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால், உமக்கு உணவை நாமே கொடுக்கிறோம்; நல்ல முடிவு இறையச்சத்திற்கே உரியது.
21:85 وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ ۖۚ
21:85. இன்னும், இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் உள்ளவர்களே!
22:35 الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِيْنَ عَلٰى مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ
22:35. அவர்கள் எத்தகையோர் என்றால் 'அல்லாஹ்' என்று (அவனது திருநாமம்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும், தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நமது பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
23:111 اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ
23:111. நிச்சயமாக அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் இன்று (அதற்குரிய நற்)கூலியைக் கொடுத்திருக்கிறேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்.
25:20 وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِيْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَيَاْكُلُوْنَ الطَّعَامَ وَيَمْشُوْنَ فِى الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَۚ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا
25:20. (நபியே!) இன்னும், உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவு அருந்துபவர்களாகவும், கடைவீதிகளில் நடமாடுபவர்களாகவும்தான் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
26:75 قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ
26:75. "அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.
28:30 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ مِنْ شَاطِیٴِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّىْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ
28:30. அவர் அதன் அருகே வந்தபோது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள வலப்பக்கத்தில் இருக்கும் ஓடையில் உள்ள (ஒரு) மரத்திலிருந்து, "மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்" என்று அழைக்கப்பட்டார்.
28:54 اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ
28:54. இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக்கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தான தர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
29:18 وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
29:18. இன்னும், நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை; ஏனெனில்,) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறைத்) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.
29:59 الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
29:59. (ஏனெனில்,) அவர்கள் பொறுமையை மேற்கொண்டார்கள்; மேலும், தங்கள் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
29:68 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَـقِّ لَمَّا جَآءَهٗؕ اَلَيْسَ فِىْ جَهَـنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ
29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட, அல்லது தன்னிடம் சத்தியம் வந்தபோது அதைப் பொய்ப்பிப்பவனை விட அநியாயக்காரன் யார்? (இத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது?
30:60 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ
30:60. ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, (மறுமையைப் பற்றி) உறுதி கொள்ளாதவர்கள் உம்மை இலேசாகக் கருதி விடவேண்டாம்.
31:17 يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ
31:17. "என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்வாயாக! நிச்சயமாக இது உறுதிமிக்க செயல்களில் உள்ளதாகும்."
31:31 اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِىْ فِى الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِيُرِيَكُمْ مِّنْ اٰيٰتِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ
31:31. தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருட்கொடையைக் கொண்டு நிச்சயமாக கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமைமிக்க, நன்றியுள்ள ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
32:24 وَ جَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ
32:24. இன்னும், அவர்கள் பொறுமையுடனிருந்து நம் வசனங்களை உறுதியாக நம்பியபோது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து உண்டாக்கினோம்.
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.
37:102 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰىؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ
37:102. பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது, அவர் கூறினார்: "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவுகண்டேன்; இதைப் பற்றி உம் கருத்து என்ன, என்பதைச் சிந்திப்பீராக!" (அதற்கு மகன்) கூறினார்: "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்; அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகவே காண்பீர்கள்."
38:44 وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ
38:44. "ஒரு பிடி புல்லை உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக! நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்); நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; (அவர்) நல்லடியார்; நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
39:10 قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
39:10. (நபியே!) நீர் கூறும்: "நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே கிடைக்கும்; அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது: பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்."
39:32 فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ اَ لَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْـوًى لِّـلْـكٰفِرِيْنَ
39:32. எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து இன்னும், உண்மையை அது தன்னிடம் வந்தபோது பொய்ப்பிப்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
40:55 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
40:77 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ
40:77. ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
41:24 فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْؕ وَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ
41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்தபோதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடமாகும்; அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக் கேட்டபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட்டோரில் உள்ளவராக மாட்டார்கள்.
41:35 وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ
41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்களைத் தவிர, (மற்ற) எவரும் அதை அடையமாட்டார்கள்; மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர, (மற்ற) எவரும் அதை அடையமாட்டார்கள்.
42:33 اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ
42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்திவிடுகிறான்; அதனால், அவை அதன் (கடலின்) மேற்பரப்பின் மீது அசைவற்றுக் கிடக்கும்; நிச்சயமாக இதில் பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:43 وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ
42:43. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்துவிட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
46:35 فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْؕ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ
46:35. (நபியே!) நம் தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், இவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள்). (இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறிய கூட்டத்தார் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
47:31 وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ
47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிவோரையும் பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை, உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம்; (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக.)
49:5 وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَـكَانَ خَيْرًا لَّهُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
49:5. நீர் அவர்களிடம் வெளியேறி வரும் வரையில் அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்,) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
52:16 اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْاۚ سَوَآءٌ عَلَيْكُمْؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
52:16. "நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு, நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக்கொள்ளுங்கள்: அல்லது சகித்துக்கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே: நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."
52:48 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும், நீர் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறி (தஸ்பீஹ்) துதி செய்வீராக!
54:27 اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ
54:27. அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பிவைப்போம்; ஆகவே, நீர் அவர்களைக் கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
68:48 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌؕ
68:48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவராக) நீர் ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது-
70:5 فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا
70:5. எனவே, நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக!
73:10 وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا
73:10. அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக்கொள்வீராக! மேலும், அழகான (கண்ணியமான) முறையில் அவர்களை விட்டுவிடுவீராக!
74:7 وَ لِرَبِّكَ فَاصْبِرْؕ
74:7. இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக!
76:12 وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ
76:12. மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்குச் சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவன் (நற்)கூலியாகக் கொடுத்தான்.
76:24 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًاۚ
76:24. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர்பார்த்து) இருப்பீராக! அன்றியும், அவர்களிலிருந்து எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்!
90:17 ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ
90:17. பின்னர், நம்பிக்கை கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்தும், இரக்கம் காட்டுமாறு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதும் (கணவாய் கடத்தல்) ஆகும்.
103:3 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்தில் இல்லை).