தவாபுல் விதஃ
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.

மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை பைத்துல்லாவில் (தவாப்) செய்துவிட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா.


இந்தத் தவாபும் தவாபுல் இபாளாபை; போன்றே செய்யப்பட வேண்டும். இத்துடன் புறப்பட்டுச் சென்றுவிடலாம்.

வரிசையாக ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை இதுவரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும்போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

தவாபின் போது பேசலாம்
தவாப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவதில் ஈடுபட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

“கஃபாவில் தவாப் செய்வது தொழுகையாகும். எனவே பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்பது நபிமொழி (நஸயீ)

எந்த நேரமும் தொழலாம், தவாப் செய்யலாம்
சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், உச்சிக்கு வரும் நேரம் ஆகிய நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் தொழலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் தவாப் செய்யலாம். 

“அப்து முனாபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்பவரையும் தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ

ஆண்களுடன் பெண்களும் தவாப் செய்வது
பெண்களும் ஆண்களுடன் தவாப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்துவிடாத வண்ணமாக அவர்கள் தவாப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாப் செய்ததாக புகாரியில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) ஹஜ் செய்த போது மக்களுக்குப் பின்னால் தவாப் செய்யுமாறு நபி (ஸல்) கூறியதாகவும் புகாரியில் காணப்படுகின்றது.

எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாப் செய்ய வேண்டும்.

அதிகமதிகம் தொழ வேண்டும்
மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

“எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக உள்ள ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அதைவிட நூறு மடங்கு (அதாவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச்) சிறந்ததாகும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்.


ஒரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகைகளை விட அதிக நன்மை என்பது கிடைப்பதற்கரிய பாக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.

இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.

“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.

அதிகமதிகம் தவாப் செய்ய வேண்டும்
இதுவரை மூன்று பெயர்களைக் கொண்ட தவாப்களைப் பற்றி நாம் அறிந்தோம். மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாபுல் குதூம் எனும் தவாப், பத்தாம் நாளன்று செய்யவேண்டிய தவாபுல் இபாளா அல்லது தவாபுஸ் ஸியாரா, மக்காவை விட்டும் ஊர் திரும்பும்போது கடைசியாகச் செய்யவேண்டிய ‘தவாபுல் விதாஃ’ ஆகியவற்றுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும், விரும்பிய நேரமெல்லாம் நபிலான-உபரியான-முறையில் தவாப் செய்யலாம்.

இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.

இந்த நபிமொழியிலிருந்து எந்த நேரமும் தவாப் செய்வதில் ஆர்வமூட்டியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்

தமத்துஃ
இஹ்ராம் கட்டுவதைப் பற்றி முன்னர் சுருக்கமாக அறிந்தோம். இப்போது விரிவாக அதைப்பற்றி நாம் அறிந்து கொள்வோம். ஹஜ்ஜுடைய மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம். ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாத சாதாரண நிலையில் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன்பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதற்கு தமத்துஃ என்று கூறப்படுகின்றது.

சுருக்கமாகச் சொல்வது என்றால் ஹஜ்ஜுடைய மாதங்களில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை நிறைவேற்றிய பிறகு மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜுக்காக எட்டாம் நாளன்று இஹ்ராம் கட்டுதல் தமத்துஃ எனப்படும்.

இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் பத்தாம் நாளன்று குர்பானி கொடுப்பது அவசியமாகும்.

உதாரணமாக, ஒருவர் ஷவ்வால் மாதம் முதல் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினால் அவர் உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு இரண்டு மாதமும் எட்டு நாட்களும் மக்காவிலேயே இருக்க வேண்டும். துல்ஹஜ் எட்டாம் நாள் அன்று ஹஜ்ஜுக்காக மக்காவில் இஹ்ராம் கட்ட வேண்டும்.

இவ்வாறு செய்யக் கூடியவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும்போது ‘லப்பைக உம்ரதன்’ என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்போது ‘லப்பைக ஹஜ்ஜன்’ என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். இவற்றுக்குரிய ஆதாரங்கள் பின்னர் வரும்.

கிரான்
கிரான் என்றால் சேர்த்துக் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும்போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். ‘லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்’ என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் எனப்படுகிறது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாக செய்வதில்லை.

தவாபுல் குதூம் செய்துவிட்டு, இஹ்ராமைக் களையாமல் இருந்து எட்டாம் நாள் முதல் ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்வார். உம்ராவுக்காக எதையும் அவர் செய்யாமல், ஹஜ் மட்டும் செய்வார். உம்ராவுக்காக எதையும் அவர் செய்யாமல், ஹஜ் மட்டும் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் இவர் செய்வார். ஆனாலும் இவர் ஹஜ்ஜும் உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.

இப்ராத்
இப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் ‘லப்பைக ஹஜ்ஜன்’ என்று கூறி இஹ்ராம் கட்டவேண்டும். அதைத்தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் அவர் உம்ராச் செய்யலாம்.

இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை. இப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் குர்பானி கொடுப்பது, இஹ்ராம் கட்டும்போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர எந்த வித்தியாசமும் இல்லை. ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார். இப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.

மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம். 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். “உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத

ஹஜ் மட்டும் செய்வதற்காக இஹ்ராம் கட்டி நாங்கள் புறப்பட்டோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். ‘ஸரிப்’ என்ற இடத்திற்கு நாங்கள் வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. நாங்கள் மக்காவை அடைந்ததும் கஃபாவைத் தவாப் செய்து ஸபா, மர்வாவுக்கிடையே ஓடினோம். யார் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வரவில்லையோ அவர்கள் இஹ்ராமைக் களையுமாறு கட்டளையிட்டார்கள். “ஹலாலாகுமா?” என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். “அனைத்துமே ஹலால்” என்று நபி (ஸல்) விடையளித்தனர். நாங்கள் மனைவியரிடம் உறவு கொண்டோம். நறுமணம் பூசிக்கொண்டோம். எங்களில் வழமையான ஆடையை அணிந்து கொண்டோம். அரபா நாளுக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது இது நடந்தது. எட்டாம் நாள் வந்ததும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் கட்டினோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர்களும் இருந்தனர். அவ்வாறு கொண்டு செல்லாதவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிக் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாப் செய்து, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும். பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ‘அகீக்’ எனும் பள்ளத்தாக்கை அடைந்தபோது “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! ‘உம்ரதுன் பீஹஜ்ஜின்’ (ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல்கள் : புகாரி, அபூதாவூத், இப்னுமாஜா.

பிறகு ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு செய்த நபி (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை. ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து இதை நாம் அறியலாம். கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு கொண்டு செல்லாதவர்கள் தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.

சற்றுமுன் நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின் வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.

மக்களெல்லாம் உம்ராவை முடித்து இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வந்துவிட்டேன். எனவே ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹஃஸா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்