பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்
பெண்கள் ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்யவேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு ஏற்பட்டு ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாப் செய்வதும், ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம்.

இதை விரிவாக அறிந்து கொள்வதற்காக மேலும் விளக்குவோம்.

மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாபுல் குதூம் செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் நாம் முன்னர் கண்டோம்.

ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் இஹ்ராம் கட்டிய பெண்ணுக்கு இந்தத் தவாப் செய்வதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்பட்டால் இந்த தவாபை அவர்கள் விட்டுவிட வேண்டும். இந்தத் தவாபை விட்டுவிட்டதால் அவர்கள் உம்ராச் செய்தவர்களாக ஆகமாட்டார்கள். மாதவிலக்கு உள்ள நிலையிலேயே ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாதவிலக்கு நிற்கும்வரை காத்திருந்து, எப்போது மாதவிலக்கு நிற்கிறதோ அப்போது தவாபுல் இபாளாவை நிறைவேற்ற வேண்டும். பத்தாம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறு செய்துவிட்டால் அவர்களுக்கு ஹஜ் நிறைவேறுகிறது. உம்ரா அவர்களுக்குத் தவறிவிட்டால் அவர்கள் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி பிறகு அதை நிறைவேற்றலாம்.

தவாபுல் குதூமை நிறைவேற்றிய பிறகு அவர்களுக்கு மாதவிலக்கு நின்றபின் தவாபுல் இபாளா செய்யவேண்டும். இவர்கள் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்திருந்தால் உம்ராவையும் அடைந்து கொள்கிறார்கள்.

‘தவாபுல் விதாஃ’ எனும் தவாபு இவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. கடைசியாகப் புறப்பட எண்ணியுள்ள நேரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்தத் தவாபுக்காக இவர்கள் பயணத்தைத் தள்ளிப் போடத் தேவையில்லை அதைச் செய்யாமலேயே திட்டமிட்டபடி புறப்பட அனுமதி உண்டு.

இவற்றுக்குரிய சான்றுகள் வருமாறு:
நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாப் செய்யவுமில்லை: ஸபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். “உன் தலையை அவிழ்த்து சீவிக்கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு! (உம்ராவை) விட்டுவிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்தூ; ரஹ்மானுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். “இது அந்த உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாப் செய்யாதே” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி

சபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது “நம்மை-நமது பயணத்தை - அவர் தடுத்து விட்டாரா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “தவாபுல் இபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது” என்று நான் கூறினேன். அதற்கவர்கள், “அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி

தவாபுல் இபாளா செய்துவிட்டால் (அதன்பிறகு மாதவிலக்கு ஏற்பட்டால்) அவர்கள் (‘தவாபுல் விதாஃ’ செய்யாமல்) புறப்பட நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி

ஹஜ்ஜுக்கு எவ்வாறு இஹ்ராம் அவசியமோ அவ்வாறே உம்ராவுக்கும் அவசியமாகும். இரண்டுக்குமிடையே சில வித்தியாசங்கள் உள்ளன.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில்தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

மக்காவாசிகளும், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும் இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்கக் கூடாது.

உம்ரா என்பது கஃபாவைத் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ஆகியவை மட்டுமே. அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இதுவே உம்ராவாகும்.

ரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.


நபி (ஸல்) அவர்கள் நான்கு தடவை உம்ராச் செய்துள்ளனர். அதில் ஒன்று ரஜப் மாதத்தில் செய்ததாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : திர்மிதீ, புகாரி (இப்னுஉமர்)

நான் எங்கிருந்து உம்ராச் செய்யவேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “நஜ்து வாசிகளுக்கு கர்ன் என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைபா என்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பா என்ற இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஜுபைர் (ரலி) நூல் : புகாரி

ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வரவேண்டும் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம்.

ஹரம் எல்லையில் இருப்பவர்கள் ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்ட வேண்டும் என்பதை நாம் அறிந்தோம். தன்யீம் என்ற இடத்தில் வேண்டுமானாலும் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறோரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.

தன்யீம் என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பியபோது “நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு! பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர்! என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

ஹாகிம், தாரகுத்னியில் “உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

உம்ராவிலிருந்து தலையை மழித்து அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

குர்பானி கொடுத்தல்
ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

இங்கே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்கவேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம்.

கிரான், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லாவிட்டாலோ அல்லது வசதியிருந்தும் குர்பானிப் பிராணி கிடைக்காவிட்டாலோ அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

உம்ரா முதல் ஹஜ் வரை நிறைவேற்றும் சவுகரியங்களை யார் பெற்றிருக்கிறாரோ அவர் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் தனக்கு) இயன்றதைக் குர்பானி கொடுக்க வேண்டும். அது கிடைக்கப்பெறாதவர்கள் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (தமது ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் : 2:196)

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை - அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

மினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும். “நபி (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.

பெருநாள் தினத்தன்று மற்றவர்கள் கொடுக்கும் குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவர் அதிலிருந்து சாப்பிடலாம்.

நபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்திமூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலி (ரலி) அவர்களையும் நபி (ஸல்) கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்து சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியை சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

எத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாக குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.

தாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம். அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே அவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தன் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமனம் செய்துள்ளனர். மேலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.
(புகாரி, முஸ்லிம்)

ஸம்ஸம் நீர்
மக்காவில் ‘ஸம்ஸம்’ என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ, ஹாகீம், பைஹகீ) 

நபி (ஸல்) அவர்கள் (‘ஸம்ஸம்’) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தனது மகன்) பழ்லு அவர்களிடம், “நீ உன் தாயாரிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வா” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இதனையே குடிக்கத் தருவீராக” என்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதையே குடிக்கத் தருவீராக” என்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ‘ஸம்ஸம்’ கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று கூறிவிட்டு, “மற்றவர்கள் உங்களுடன் போட்டியிடத் துவங்கிவிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறக்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்” எனவும் கூறினார்கள்.
றிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி

‘ஸம்ஸம்’ நீரை கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ‘ஸம்ஸம்’ நீர் அருந்துவது புனிதமானது எனவும் அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ‘ஸம்ஸம்’ நீரை வேண்டிப் பெற்று நபி (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்து இதனை நாம் அறியலாம்.
“நமக்கும் முனாஃபிக்களுக்கும் வித்தியாசம் அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை தாகம் தீர அருந்துவதில்லை என்பதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : இப்னுமாஜா, ஹாகிம், தாரகுத்னி.

“ஸம்ஸம் நீர் எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகிறதோ அதற்கேற்ப அமையும்” அதன் மூலம் நீ நோய் நிவாரணம் நாடினால் உனக்கு அல்லாஹ் நிவாரணம் அளிப்பான். வயிறு நிரம்பச் செய்வான். உன் தாகத்தைத் தீர்ப்பதற்காக அருந்தினால் தாகத்தைத் தீர்ப்பான். அது ஜிப்ரீல் (அலை) காலால் மிதித்ததால் ஏற்பட்டதாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகம் தீர்த்ததாகும்” எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : ஹாகிம், தாரகுத்னி

அது இறைவனால் அருளப்பட்ட அற்புத நீருற்று என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸம்ஸம் நீரை நின்று கொண்டுதான் குடிக்கவேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்க கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள்.

இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது. மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும்போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.