பக்கம் - 141 -
“எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை அன்றி, பாதுகாப்பவர் அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்”

“நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்.” (அல்குர்ஆன் 72:12)

அல்லாஹ்வின் இந்த மாபெரும் உதவியாலும் மகத்தான நற்செய்திகளாலும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திலிருந்து கவலை நீங்கியது துக்கம் அகன்றது மக்காவிற்கு திரும்பச் சென்று இஸ்லாமைப் பரப்புவதிலும் நிரந்தரமான அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதிலும் தனது முந்திய திட்டத்தையே புதிய உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டார்கள்.

அப்பொழுது ஜைது இப்னு ஹாரிஸா “நபியே! குறைஷிகள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றி இருக்க, நீங்கள் இப்பொழுது எப்படி அங்கு செல்ல முடியும்?” என்றார். அதற்கு “ஜைதே! நீங்கள் பார்க்கும் இந்த துன்பங்களுக்கு ஒரு முடிவையும் நல்ல மகிழ்ச்சி தரும் மாற்றத்தையும் நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக, அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வான் அவனது நபிக்கு வெற்றியைத் தருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் “ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்” எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், “தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு “தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது” என்று அவர் மறுத்துவிட்டார்

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் “ஆம்! நான் அடைக்கலம் தருவேன்” என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, “நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்” என்று அவர்களுக்கு அறிவித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாரிஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு “குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது” என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.

அபூஜஹ்ல் “நீ அடைக்கலம் (மட்டும்) அளித்துள்ளாயா? அல்லது முஸ்லிமாகி விட்டாயா?” என்று முத்இமிடம் கேட்டான். அதற்கு “இல்லை. நான் அடைக்கலம்தான் அளித்துள்ளேன்” என்று முத்இம் கூறவே, “சரி! நீ அடைக்கலம் கொடுத்தவருக்கு நாங்களும் அடைக்கலம் கொடுக்கிறோம்” என்று கூறினான். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முத்இமின் இந்த செயலை நபி (ஸல்) நினைவு வைத்திருந்தார்கள். “பத்ர் போரில் எதிரிகள் பலர் கைதிகளாக்கப்பட்டபோது, முத்இம் உயிருடன் இருந்து, இந்த துர்நாற்றம் பிடித்தவர்களின் உரிமைக்காக என்னிடம் பேசியிருந்தால் அவருக்காக இவர்கள் அனைவரையுமே நான் விடுதலை செய்திருப்பேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)