பக்கம் - 140 -
இந்த ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒன்று ‘அஹ்காஃப்’ எனும் அத்தியாயத்தில்:

“(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) “நீங்கள் வாய்பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்” என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

(அவர்களை நோக்கி) “எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவான்.” (அல்குர்ஆன் 46:29, 30, 31)

மற்றொன்று ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில்:

“(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” (அல்குர்ஆன் 72:1-15)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாத அவனுடைய படையைக் கொண்டு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும், இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடைவதை தடுத்திட முடியாது என்று அவ்வசனங்கள் மிக உறுதியாக அறிவித்தன.