பக்கம் - 146 -
குறைஷிகள் அங்கே கூடி இருந்தனர். நான், “குறைஷி குலத்தாரே! ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை’ என்று நான் சாட்சி கூறுகின்றேன். ‘முஹம்மது அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் நான் சாட்சி கூறுகிறேன்” என்றேன். உடனே “மதம் மாறிய இவனை எழுந்து சென்று கவனியுங்கள்” என்ற கட்டளை பறந்தது. அவர்கள் எழுந்து வந்தார்கள். உயிர் போவது போல் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு என்மீது கவிழ்ந்து அடிபடாமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வியாபாரத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)” என்று கேட்டவுடனே அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் மீண்டும் கஅபா சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள் “மதம் மாறிய இவனை கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னைத் தாக்கியது போலவே இன்றும் தாக்கினார்கள். அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னைக் கண்டுகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள்.”

(இதை அறிவித்த பிறகு) இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “இது அபூதர் அவர்கள் இஸ்லாமை தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4) துஃபைல் இப்னு அம்ர் தவ்ஸி: இவர் தவ்ஸ் கூட்டத் தலைவர். சிறந்த பண்புள்ளவராகவும், நுண்ணறிவாளராகவும், கவிஞராகவும் இருந்தார். இவருடைய கோத்திரம் யமன் நாட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென தனி ஆட்சி அதிகாரம் இருந்தது. இவர் நபித்துவத்தின் 11 வது ஆண்டு மக்கா வந்தபோது மக்காவாசிகள் இவரை மிகுந்த உற்சாகம் பொங்க மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “துஃபைலே! நீங்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் இதோ இந்த மனிதர் இருக்கிறாரே எங்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டார் எங்களது ஒற்றுமையைக் குலைத்து எங்கள் காரியங்களைச் சின்னபின்னமாக்கி விட்டார் இவரது பேச்சு சூனியம் போன்றது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், கணவன், மனைவி ஆகியோடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டார் எங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை உமக்கோ உமது கூட்டத்தினருக்கோ ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம். நீங்கள் அவரிடம் எதுவும் பேசவும் வேண்டாம் எதையும் கேட்கவும் வேண்டாம்” என்று அவருக்கு அறிவுரைக் கூறினார்கள்.

துஃபைல் கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தொடர்ந்து இவ்வாறே மக்காவாசிகள் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களின் எந்தப் பேச்சையும் கேட்கக் கூடாது அவரிடம் அறவே பேசவும் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சைக் கேட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பள்ளிக்குச் செல்லும்போது எனது காதில் துணியை வைத்து அடைத்துக் கொள்வேன்.