பக்கம் - 145 -
அபூதர் அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: “நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தேன். அப்போது தம்மை நபி என்று சொல்லிக்கொண்டு ஒரு மனிதர் மக்காவில் திரிகிறார் என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் அனீஸிடம் “நீ இந்த மனிதரிடம் போய் பேசி அவரைப் பற்றிய செய்தியைத் தெரிந்து வா” என்று சொன்னேன். அவ்வாறே சென்று அவரைச் சந்தித்து திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி இருக்கிறது?” என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம் ‘அவரைப் பற்றிய முழுமையான செய்தியை எனக்கு நீ தரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன தண்ணீர் பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்கா நோக்கிப் புறப்பட்டேன்.

அவரை நான் தேடி வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. வேறு உணவு இல்லாததால் ஜம்ஜம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அலீ (ரழி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டதும் “ஆள் ஊருக்குப் புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள், நான், “ஆம்!” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் நம் வீட்டிற்கு வாருங்கள் போகலாம்” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் சென்றேன். ஆனால், எதைப் பற்றியும் அவர்களிடம் நான் கேட்கவுமில்லை எதையும் அவர்களுக்குத் தெரிவிக்கவுமில்லை.

காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க கஅபாவிற்குச் சென்றேன். ஆனால், அங்கு ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரழி) என்னைப் பார்த்தார்கள். “தாங்கள் தங்க வேண்டியுள்ள வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று சாடையாகக் கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரழி) “என்னுடன் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, “விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் உங்களுக்கு அதை தெரிவிக்கிறேன்” என்றேன். அதற்கு அவர்கள் “அவ்வாறே செய்கிறேன்” என்றார்கள்.

நான் அப்போது ‘இங்கே தம்மை இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. நான் என் சகோதரரை அவரிடம் பேசி வரும்படி அனுப்பினேன். போதிய விவரத்தை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்களும் நுழையுங்கள். போகும்போது உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் கண்டால், செருப்பைச் சரிசெய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் என்னைக் கடந்து போய்க் கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள்.

இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் “எனக்கு இஸ்லாமை எடுத்துரையுங்கள்” என்று சொல்ல அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் அதே இடத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “அபூதர்ரே! (நீங்கள் இஸ்லாமை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வையுங்கள். தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். நாங்கள் மேலோங்கி பெரும்பான்மையாகி விட்ட செய்தி உங்களுக்கு எட்டும்போது எங்களிடம் வாருங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு நான் “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு இறையில்லத்திற்கு வந்தேன்.