பக்கம் - 144 -
2) இயாஸ் இப்னு முஆத்: மதீனாவைச் சேர்ந்த இளைஞரான இவர் ‘புஆஸ்’ யுத்தத்திற்கு முன் நபித்துவத்தின் 11வது ஆண்டு அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ் கிளையாருக்கு எதிராக மக்காவிலுள்ள குறைஷிகளிடம் நட்பு ஒப்பந்தம் செய்ய வந்தபோது இவரும் அவ்ஸ் கிளையாருடன் மக்கா வந்தார். மதீனாவில் அவ்ஸ் கஜ்ரஜுக்கிடையில் பகைமைத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் அது. அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ்ஜை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் குறைஷிகளின் நட்பை நாடி வந்தனர்.

இவர்களின் வருகையை அறிந்துகொண்ட. நபி (ஸல்), இவர்களிடம் சென்று “நீங்கள் எதற்காக வந்துள்ளீர்களோ அதைவிடச் சிறந்த ஒன்றை அறிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அது என்ன?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் என்னை அவனது அடியார்களிடம் அனுப்பியுள்ளான். அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது அல்லாஹ் எனக்கு வேதத்தையும் இறக்கி வைத்திருக்கிறான்” என்று கூறி இஸ்லாமின் ஏனைய விஷயங்களையும் நினைவூட்டி, குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள்.

அப்போது இயாஸ் “எனது கூட்டத்தாரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் வந்திருக்கும் நோக்கத்தை விட இதுதான் மிகச் சிறந்தது” என்று கூறினார். உடனே அக்கூட்டத்தில் உள்ள அபுல் ஹைஸர் என்ற அனஸ் இப்னு ராஃபி, ஒருபிடி மண் எடுத்து இயாஸின் முகத்தில் வீசி எறிந்து, “இதோ பார்! எங்களை விட்டுவிடு. சத்தியமாக நாங்கள் வேறொரு நோக்கத்திற்கு வந்திருக்கிறோம்” என்று கூறினான். அதற்குப் பின் இயாஸ் வாய்மூடிக் கொள்ளவே நபி (ஸல்) அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். அவ்ஸ் கிளையினர் குறைஷிகளுடன் நட்பு ஒப்பந்தம் செய்வதில் தோல்வி கண்டு மதீனா திரும்பினர். அடுத்த சில காலத்திலேயே, இயாஸ் இறந்துவிட்டார். அவர் மரணிக்கும்போது ‘லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முஸ்லிமாகவே இறந்தார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. (இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மது)

3) அபூதர் கிஃபா: இவர் மதீனாவின் சுற்றுப்புறத்தில் வசித்து வந்தார். ஸுவைத், இயாஸ் ஆகியோரின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவச் செய்தி மதீனாவை அடைந்தபோது அபூதருக்கும் அந்த செய்தி எட்டியிருக்கலாம். பிறகு அதுவே இஸ்லாமில் வர ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “அபூதர் அவர்கள் இஸ்லாமைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள், நாங்கள் “அறிவியுங்கள்” என்றவுடன் இப்னு அப்பாஸ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.