பக்கம் - 164 -
நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய அனைவரும் ஒன்று சேர்ந்தபின் அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) அவர்கள் எழுந்து “மக்களே! இவரிடம் நீங்கள் எதற்கு வாக்குக் கொடுக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் ‘அது எங்களுக்கு நன்கு தெரியும்’ என்றவுடன், தொடர்ந்து அவர் “மக்களே! நீங்கள் இவரிடம் வெள்ளையர், கருப்பர் என அனைத்து மக்களுக்கு எதிராக போர் செய்யவும் தயார் என்று வாக்கு கொடுக்கின்றீர்கள். உங்களது செல்வங்கள் அழிந்து, உங்களில் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்படும் போது நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள் என்று கருதினால் இப்போதே இவரை இங்கேயே விட்டு விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தத் தவறை நீங்கள் செய்வது இம்மையிலும் மறுமையிலும் மிகப்பெரிய இழிவை உங்களுக்குத் தரும். உங்களது செல்வங்கள் அழிந்தாலும்கூட உங்களது சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப் பட்டாலும் கூட எந்த நிபந்தனைகளுடன் நீங்கள் இவரை அழைத்துச் செல்ல இருக்கிறீர்களோ அந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி உங்களுக்கு இருப்பின் இவரை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இம்மை மறுமையின் மிகப்பெரிய நற்பாக்கியமாகும்” என்று கூறினார்.

அதற்கு அம்மக்கள் “செல்வங்கள் அழிந்தாலும் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப் பட்டாலும் நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம் கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான் இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சொர்க்கம் கிடைக்கும்” என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் உங்களது “கையை நீட்டுங்கள்” என்று கூற நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘பைஆ’ செய்ய எழுந்தபோது, முதலாவதாக எங்களில் மிகக் குறைந்த வயதுடைய அஸ்அது இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்:

“மதீனாவாசிகளே! சற்றுப் பொறுங்கள். இவர் அல்லாஹ்வின் தூதர். இவரை இவரது ஊரிலிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்வதால் முழு அரபு இனத்தையும் பிரிய வேண்டும் நம்மிலுள்ள மேன்மக்கள் கொலை செய்யப்படலாம் நம்மை எதிரிகளின் வாட்கள் வெட்டி வீழ்த்தலாம் இவை அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் நாம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்பது தெரிந்த விஷயமே. ஆனால், இப்போது நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவெனில், இந்த சோதனைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமென்றால் இவரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அதற்குரிய கூலியை நிச்சயம் அல்லாஹ் உங்களுக்குக் கொடுப்பான். ஒருவேளை உங்களது உயிரைப் பற்றிய பயம் உங்களுக்கு இருந்தால் இப்போது இவரை இங்கேயே விட்டுவிடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விடலாம்.” இவ்வாறு அஸ்அத் கூறிமுடித்தவுடன் மக்கள் “அஸ்அதே! உமது கையை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம் ஒருக்காலும் அதை முறிக்கவும் மாட்டோம்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ)