பக்கம் - 182 -
2) அபூபக்ர் (ரழி) பொதுவாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் செல்லும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் வயோதிக தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) வாலிப தோற்றமுடையவர்களாகவும் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாகவும் இருந்தார்கள். அப்போது இடையில் யாராவது அபூபக்ர் (ரழி) அவர்களைப் பார்த்து “உனக்கு முன் செல்பவர் யார்?” என்று கேட்டால் “எனக்கு வழி காட்டுபவர்” என்று கூறுவார்கள். கேட்டவர் பயணப் பாதையை காட்டக் கூடியவர் என்று விளங்கிக் கொள்வார். அபூபக்ர் (ரழி) அவர்களோ “நன்மைக்கு வழி காட்டுபவர்” என்ற பொருளை மனதில் எண்ணிக் கொள்வார்கள். (ஸஹீஹுல் புகாரி)

3) இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் குஜாம் கிளையைச் சேர்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் இரண்டு கூடாரங்களைக் கண்டார்கள். அந்தக் கூடாரங்கள் மக்காவிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ள ‘குதைத்’ என்ற ஊரின் எல்லையில் ‘முஷல்லல்’ என்ற இடத்தில் இருந்தது. இந்த ‘உம்மு மஅபத்’ வீரமும், துணிவுமிக்கவர் ஆவார். இவர் எப்போதும் தனது கூடாரத்தின் வெளியில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடந்து செல்பவர்களுக்கு உணவும், நீரும் வழங்கி வருவார். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் “உன்னிடம் எதுவும் சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஏதாவது இருப்பின் நான் உங்களுக்கு விருந்தளிப்பதில் குறைவு செய்ய மாட்டேன். ஆட்டு மடியிலும் பால் இல்லையே! இந்த ஆண்டு மிகப் பஞ்சமாக இருக்கின்றது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் பார்வை கூடாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆட்டின் மீது பட்டது. “உம்மு மஅபதே! இது என்ன ஆடு?” என்று கேட்டார்கள். அவர் “இது ஆட்டு மந்தையுடன் சேர்ந்து மேய்ந்துவர முடியாத அளவுக்கு பலவீனமான ஆடு” என்றார். “அது பால் தருமா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அது மிக மெலிந்ததாயிற்றே!” என்று அப்பெண் கூறினார். “நான் அந்த ஆட்டில் பால் கறந்துகொள்ள எனக்கு அனுமதியளிக்கிறாயா?” என்று நபி (ஸல்) கேட்க, “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! அதில் பால் இருக்கிறது என்று நீங்கள் கருதினால் தாராளமாக கறந்து கொள்ளுங்கள்” என்றார் அப்பெண்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறி அல்லாஹ்விடம் பிரார்தித்தார்கள். அல்லாஹ்வின் அருளால் ஆட்டின் மடி பாலால் நிரம்பி சொட்டியது. ஒரு நடுத்தரமான பாத்திரத்தை எடுத்துவரக் கூறி அதில் பால் கறந்தார்கள். பாத்திரம் நிரம்பவே முதலில் அப்பெண்மணிக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அவர் குடித்து தாகம் தீரவே பின்பு தனது தோழர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களுக்குப் பின்பு நபி (ஸல்) குடித்தார்கள். பின்பு மற்றொரு முறை அந்த பாத்திரம் நிரம்பப் பால் கறந்து அப்பெண்மணியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவர் அபூ மஅபத், மெலிந்த நடக்க இயலாத பலவீனமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கு வந்தார். அங்கு பால் கறக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்து “இந்தப் பால் உனக்கு எங்கிருந்து கிடைத்தது? வீட்டில் பால் சுரக்கும் ஆடு இல்லை மற்ற ஆடுகளும் தூரமாக இருந்தன. எப்படி உனக்கு பால் கிடைக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு அப்பெண் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு நல்ல பாக்கியம் பெற்ற மனிதர் இங்கு வந்தார். அவர் இப்படி இப்படியெல்லாம் பேசினார். அவன் நிலை இப்படி இப்படி இருந்தது” என்று வருணித்தார். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் தேடும் மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்று கூறி அவரைப் பற்றி முழுமையாக எனக்கு விவரித்துக் கூறு” என்றார்.