பக்கம் - 184 -
எனது அடிமைப் பெண்ணிடம் எனது குதிரையைத் தூரத்தில் உள்ள ஒரு மேட்டுக்குக் கொண்டு வந்து என்னை எதிர்பார்த்திருக்கும்படி கூறினேன். பின்பு எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப் புறமாக வெளியேறி அந்த ஈட்டியை பூமியில் தேய்த்தவனாக எனது குதிரையில் ஏறினேன். நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது “வேண்டாம்” என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோ அதிகம் அதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் “உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்” என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் “எங்களின் செய்திகளை மறைத்துவிடு” என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூபக்ர் (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரிகள் எங்களை வலைவீசித் தேடினர். ஆனால், சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமைத் தவிர வேறு எவராலும் எங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை. சுராக்கா எங்களுக்கு அருகாமையில் வந்தவுடன் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நம்மை தேடி வந்து விட்டார்கள்” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

“நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” (அத்தவ்பா 9:40)

என்று கூறினார்கள்.