பக்கம் - 192 -
ஆனால், மதீனாவில் முஸ்லிம்கள் வசமே முழு உரிமையும், ஆதிக்கமும் இருந்தன. மாற்றார் யாரும் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு வலுவாக, பெரும்பான்மையாக இருந்தனர். ஆகவே, இப்போது முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்குத் தேவையான சட்டங்களையும் அடிப்படைகளையும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளாதாரம், வாழ்வியல், அரசியல், போர், சமாதானம், ஆகுமானவை, ஆகாதவை, வணக்க வழிபாடுகள் என்று சமூகத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டிய தக்க நேரம் இதுவாகவே இருந்தது.

ஆம்! பத்து ஆண்டுகளாக பல துன்பங்களையும் வேதனைகளையும் எதற்காக முஸ்லிம்கள் அனுபவித்து வந்தார்களோ, அந்த அழைப்புப் பணிக்கு வழிகாட்டியாக, ஏனைய மனித சமுதாயத்திலிருந்தும் அறியாமைக்கால சமூகத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறந்த சமுதாயத்தை முஸ்லிம்கள் அமைக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

இதுபோன்ற சமுதாயத்தை அமைப்பது ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் அல்லது ஒரே ஆண்டில் சாத்தியமல்ல மாறாக, சட்டம் அமைத்தல், ஒழுங்குபடுத்துதல், பயிற்சியளித்தல், கல்வி புகட்டுதல், சட்டங்களை செயல்படுத்துதல் என அனைத்தும் முழுமை பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்பட்டது. அல்லாஹ் இம்மார்க்கத்தை அமைப்பதற்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது சட்டங்களைச் செயல்படுத்தினார்கள், அதன் பக்கம் வழிகாட்டினார்கள். முஸ்லிம்களைச் சீர்ப்படுத்தித் தூய்மைபடுத்தினார்கள்.

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)

நபித்தோழர்கள் தங்களது உள்ளங்களால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனின் வசனங்கள் மூலம் தங்களுக்கு இடப்படும் சட்டங்களை முழுமையாக பின்பற்றியதுடன் அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும் அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மேன்மேலும்) அதிகக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)

இங்கு இதுபோன்ற விஷயங்களை ஆராய்வது நமது நோக்கல்ல. எனவே, நாம் இங்கு தேவையான அளவிற்கு மட்டும் கூறுகிறோம்.

இஸ்லாமியச் சமுதாயத்தை உருவாக்குவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் குறிக்கோளுமாகும். இதுதான் முஸ்லிம்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த மிக மகத்தான பணியாகும். இது அவசரமாக செய்து முடிக்க வேண்டிய தற்காலிக பணியல்ல மாறாக, இது அடிப்படை பிரச்சனையாகும். இதை முடிப்பதற்குப் பல காலங்கள் தேவைப்படும். ஆனால், அங்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகளும் இருந்தன.