பக்கம் - 289 -
“அல்லாஹ்வே! (முஸ்லிம்களாகிய) இவர்கள் செய்த காரியத்திலிருந்து உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இணைவைப்பவர்களாகிய அவர்கள் செய்த காரியத்திலிருந்து விலகி உன்னளவில் மீளுகிறேன்.” இவ்வாறு முறையிட்டப் பின் எதிரிகளை நோக்கி முன்னேறினார். அப்போது அவரை ஸஅது இப்னு முஆத் (ரழி) சந்தித்து “அபூ உமரே! எங்கே செல்கிறீர்?” என வினவினார். அதற்கு அனஸ் (ரழி) “ஹா... சொர்க்கத்தின் நறுமணம் எவ்வளவு அருமையானது. உஹுதுக்கருகில் அதை நான் நுகர்கிறேன்” என்று கூறி எதிரிகளிடம் போர் செய்து உயிர் நீத்தார். இறுதியில் அவரை எவராலும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உடல் சிதைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்ததற்குப் பின் அவரது நுனிவிரலைப் பார்த்துதான் அவரது சகோதரி அவரை அடையாளம் காட்டினார். அப்போது அவரது உடலில் ஈட்டி, அம்பு, வாள் ஆகிய வற்றால் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

ஸாபித் இப்னு தஹ்தாஹ் என்ற நபித்தோழர் தனது கூட்டத்தை அழைத்து “அன்சாரி சமூகமே! முஹம்மது (ஸல்) திட்டமாக கொல்லப்பட்டு விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் உயிருடன் இருக்கின்றான் அவன் மரணிக்க மாட்டான் உங்களது மார்க்கத்திற்காக நீங்கள் போர் புரியுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை வழங்குவான் உங்களுக்கு உதவி செய்வான்” என்று கூற அன்சாரிகளின் ஒரு கூட்டம் அவருடன் புறப்பட்டார்கள். அவர்கள் காலிதின் குதிரைப் படை வீரர்களைத் தாக்கினர். ஆனால், காலித் இவரையும் இவரது தோழர்களையும் கொன்றுவிட்டார். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

ஒரு முஹாஜிர், அன்சாரி ஒருவருக்கு அருகில் சென்றார். அந்த அன்சாரி வெட்டப்பட்டு இரத்தத்தில் உழன்று கொண்டிருந்தார். அப்போது அந்த முஹாஜிர், அன்சாரியிடம் “முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டு விட்டார்கள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அன்சாரி முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டுவிட்டாலும் அவர்கள் மார்க்கத்தை எடுத்து வைத்து விட்டார்கள். நீங்கள் உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள்” என்று கூறினார். (ஜாதுல் மஆது)

இதுபோன்ற வீர உரைகளாலும் உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலும் முஸ்லிம்களுக்கு ஆன்மீக பலம் திரும்பியது. நிலை தடுமாறி நின்ற அவர்கள் சகஜநிலைக்குத் திரும்பினர். பணிவது அல்லது அப்துல்லாஹ் இப்னு உபையுடன் சேர்ந்துகொள்வது என்ற குழம்பிய சிந்தனையிலிருந்து விடுபட்டு தங்களது ஆயுதங்களைக் கையிலெடுத்துக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட ஆரம்பித்தார்கள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு நபியவர்களை நோக்கி முன்னேறினர். நபியவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெறும் பொய்யென அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இதனால் அவர்களின் பலம் மேலும் கூடியது. எனவே, எதிரிகளின் கூட்டத்துடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டே முன்னேறி நபியவர்களுக்கருகில் ஒன்று கூடினர்.

இதே நேரத்தில் மூன்றாவது ஒரு பிரிவினரும் இருந்தனர். அவர்களது கவலை நபியவர்களைப் பற்றியே இருந்தது. இவர்களில் அபூபக்ர், உமர், அலீ (ரழி) முதலிடம் வகித்தனர். நபியவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தவுடன் முன்னேற்பாடாக நபியவர்களைச் சுற்றி இவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.