பக்கம் - 288 -
இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஒரு சம்பவம் ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளதாவது:

உஹுத் போர் முடிவுறும் தறுவாயில் இணைவைப்பவர்ளுக்குக் கடும் தோல்வி ஏற்பட்டது. அப்போது இப்லீஸ் முஸ்லிம்களைத் தடுமாற வைப்பதற்காக அவர்களைச் சப்தமிட்டு அழைத்து “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் வருபவர்களை பாருங்கள்” என்று கூறினான். இவனது சப்தத்தைக் கேட்ட முஸ்லிம் படையின் முன்பகுதியில் இருந்தவர்கள் தங்களில் ஒருவர்தான் அழைக்கிறார் தங்களுக்கு பின்பகுதியில் எதிரிகள் வந்துவிட்டதாகக் கருதி விரைவாக திரும்பி தங்களுக்கு பின்பகுதியில் இருந்த முஸ்லிம்களுடன் சண்டையிட்டனர். இவ்வாறு முஸ்லிம்களுக்குள்ளாகவே தாக்குதல் நிகழ்ந்துவிட்டது. அந்நேரத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களின் தந்தையை முஸ்லிம்கள் எதிரி என்று நினைத்து அவரைக் கொல்ல பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்த ஹுதைஃபா (ரழி) “அவர் எனது தந்தை! அவர் எனது தந்தை! அவரை விட்டுவிடுங்கள்” என்று கத்தினார். ஆனால், அவரது சப்தம் எவர் காதிலும் விழவில்லை. எனவே, அவரை விரட்டிச் சென்று கொன்றே விட்டனர். ஆனால், ஹுதைஃபா (ரழி) தங்களது தோழர்களைக் கோபிப்பதற்குப் பதிலாக “அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்” என்று கூறினார்.

மேற்கூறப்பட்ட சம்பவத்தை அன்னை ஆயிஷாவிடமிருந்து அறிவிக்கும் ‘உர்வா’ கூறுகிறார்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹுதைஃபா மிக நல்லவராக இருந்தார். அதே நிலையில் அல்லாஹ்விடம் சேர்ந்துவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு அவர்கள் கூறியதற்குக் காரணம், இவன் தந்தை முஸ்லிமாக இருந்தும் தவறுதலாக படுகொலை செய்யப்பட்டார், அதற்குப் பிணையத் தொகையாக நூறு ஒட்டகங்களைத் தருவதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்வந்தார்கள். ஆனால், ஹுதைஃபா (ரழி) அவர்கள் பெருந்தன்மையாக அதை முஸ்லிம்களுக்கே தானம் செய்து விட்டார்கள். இச்செயல் நபியவர்களின் உள்ளத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களைப் பற்றிய சிறந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. ஹுதைஃபா (ரழி) அவர்கள் பிற்காலத்திலும் இதே பெருந்தன்மையுடனே திகழ்ந்தார்கள். இதையே உர்வா மேற்கூறியவாறு சுட்டிக் காட்டினார்கள்.

இந்தக் கூட்டத்தின் அணிகளுக்கிடையில் பெரும் குழப்பமும் தடுமாற்றமும் நிலவியது. அதிகமானவர்கள் என்ன செய்வது, எங்கே செல்வது என்று தெரியாமல் குழப்பத்திற்குள்ளாகினர். இந்நிலையில் இருக்கும்பொழுது “முஹம்மது கொல்லப்பட்டு விட்டார்” என்று ஒருவன் ஓலமிடுவதைக் கேட்ட அவர்கள், மிச்சமீதமிருந்த தன்னம்பிக்கையையும் இழந்தார்கள் அவர்களது மனபலமும் குன்றியது சிலர் போரை நிறுத்திக்கொண்டு சோர்வுற்று ஆயுதங்களைக் கீழே போட்டான் மற்றும் சிலர் நயவஞ்கர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் சேர்ந்து கொள்ளலாம். அவர் நமக்காக அபூ ஸுஃப்யானிடம் பாதுகாப்பு வாங்கித் தருவார் என்று எண்ணினர். தங்களது கையிலுள்ள ஆயுதங்களைப் போட்டுவிட்டு நிராயுதபாணியாய் இருந்த இத்தகைய கூட்டத்தை அனஸ் இப்னு நள்ர் (ரழி) பார்த்தபோது, அவர்களிடம் “நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டு விட்டார்கள்” என பதிலளித்தனர். அதற்கு அனஸ் (ரழி) “நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வாழ்ந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நபியவர்கள் எக்காரியத்திற்காக உயிர் நீத்தார்களோ அதற்காக நீங்களும் உங்கள் உயிரைத் தியாகம் செய்யுங்கள்!” என்று கூறியபின் அல்லாஹ்விடம் பின்வருமாறு முறையிட்டார்கள்: