பக்கம் - 33 -
இதைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், “அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவற்றை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). (அல்குர்ஆன் 39 : 3)

(இணைவைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் “இவை அல்லாஹ் விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10 : 18)

மூடநம்பிக்கைகள்

அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்று வகையாக இருக்கும்.

முதல் வகை: இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ‘ஆம்!’ எனவும் மற்றொன்றில் ‘வேண்டாம்’ எனவும் எழுதப்பட்டு, மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள். அவற்றில் ‘ஆம்!’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள். ‘வேண்டாம்’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள். எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாவது வகை: இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

மூன்றாவது வகை: இந்த அம்புகளில் ‘மின்கும்’ (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் ‘மின்கைகும்’ (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும், ‘முல்ஸக்’ (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும். அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ‘ஹுபுல்’ என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள். தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள். பூசாரி அம்பை எடுப்பார். அப்போது ‘மின்கும்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள். ‘மின் ஙைகும்’ என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள். ‘முல்ஸக்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார். அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது. அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். ஒன்றில் ‘ராபிஹ்’ என்றும் இரண்டாவதில் ‘குஃப்ல்’ என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ‘ராபிஹ்’ என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார். ‘குஃப்ல்’ என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது. ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.