பக்கம் - 347 -
இவ்வாறு மோசடி மற்றும் வஞ்சக குணமுள்ள விஷப் பாம்புகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக குவிந்த ராணுவங்களுக்கும் உதவியும் செய்தனர். அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆகவே, யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர். எனவே, அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.

இந்த குரைளா யூதர்களுடன் நளீர் யூதர்களைச் சேர்ந்த கொடிய ஷைத்தான் ஹய் இப்னு அக்தப் என்பவனும் கொலை செய்யப்பட்டான். இவன் நமது அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களின் தந்தையாவான். இவன்தான் இப்போரின் போது முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி கஅப் இப்னு அஸ்அதைத் தூண்டினான். இதன் விவரத்தை முன்பே நாம் கூறியிருக்கிறோம். குறைஷி மற்றும் கத்ஃபான் இனத்தவர்கள் போரிலிருந்து திரும்பிச் சென்ற பின் ஹய் இப்னு அக்தப், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக குரைளா யூதர்களின் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். மற்றவர்களுடன் இவனும் கைது செய்யப்பட்டு, கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டான். தன்னை கொன்றதற்குப் பின் தனது ஆடைகளை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்து பக்கங்களிலும் விரல்களின் நுனி அளவிற்கு கிழித்து ஓட்டையிட்டுக் கொண்டான். நபியவர்களுக்கு அருகில் இவனை அழைத்து வந்த போது அவன் நபியவர்களைப் பார்த்து “உன்னைப் பகைத்துப் கொண்டதற்காக நான் என்னை இகழவில்லை. இருப்பினும் அல்லாஹ்வுடன் மோதியவன் தோற்றுவிடுவான் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டு “மக்களே! அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற சோதனைகளையும் போர்களையும் அல்லாஹ் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) மீது விதித்து விட்டான்” என்று கூறினான். பிறகு அவனது தலை வெட்டப்பட்டது.

கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித்தோழரை ஒரு யூதப் பெண் மாவாட்டும் திருகையால் கொன்று விட்டாள். எனவே, அப்பெண்ணையும் பழிக்குப் பழி கொல்லப்பட்டது.

முடி முளைத்த அனைவரையும் கொன்று, முடி முளைக்காதவர்களை விட்டு விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். முடி முளைக்காதவர்களில் ‘அத்தியா’ என்ற ஒரு சிறுவர் இருந்தார். பிற்காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராக மாறினார். (முடி முளைத்தவர்கள் என்பது (மேஜர்) பருவமடைந்தவர்களையும் முடி முளைக்காதவர் என்பது (மைனர்) பருவமடையாதவர்களையும் குறிக்கும்).

ஸாபித் இப்னு கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதரையும் அவரது குடும்பத்தார்கள் மற்றும் பொருட்களையும் தனக்கு தந்துவிடுமாறு நபியவர்களிடம் கோரினார். நபியவர்களும் அவர் கேட்டவாறே கொடுத்து விட்டார்கள். நபித்தோழர் ஸாபித்துக்கு இதற்கு முன் இந்த யூதர் உதவி புரிந்திருந்தார். ஸாபித் அவரிடம் “உன்னையும் உமது பொருளையும், உமது குடும்பத்தார்களையும் நபியவர்கள் எனக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். நான் அவற்றைத் திரும்ப உனக்கே கொடுத்து விடுகிறேன்” என்றார். ஆனால், அந்த ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதன் “ஸாபித்தே நான் உனக்கு செய்த உதவியின் பொருட்டால் கேட்கிறேன். என்னைக் கொன்று என்னுடைய சகோதரர்களுடன் சேர்த்துவிடு” என்றான். ஸாபித் அவனது கழுத்தைச் சீவி அவனது நண்பர்களுடனேயே சேர்த்து விட்டு, அவனது மகன் அப்துர் ரஹ்மான் இப்னு ஜுபைரை உயிரோடு விட்டுவிட்டார். இவர் பிறகு இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.