பக்கம் - 348 -
உம்முல் முன்திர் ஸல்மா பின்த் கைஸ் (ரழி) என்ற ஸஹாபிப் பெண்மணி ‘ஃபாஆ இப்னு ஸம்வால்’ என்ற யூதரைத் தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும்படி நபியவர்களிடம் கேட்டார். நபியவர்கள் கொடுத்துவிடவே அப்பெண்மணி அவரை உயிரோடு விட்டுவிட்டார். அந்த யூதர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.

அன்றிரவு கோட்டையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன் சிலர் இஸ்லாமை ஏற்றனர். எனவே, அவர்களைக் கைது செய்யவில்லை. அவர்களது பொருட்களும் குடும்பங்களும் பாதுகாக்கப்பட்டன.

அம்ர் இப்னு ஸஅதி என்ற ஒரு யூதர் இருந்தார். நபியவர்களுக்குத் தனது இனத்தவர் செய்த மோசடியில் அவர் கூட்டு சேரவில்லை. அன்றிரவு அவர் கோட்டையில் இருந்து வெளியேறியதை பாதுகாப்புப் படையின் தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமா பார்த்தார். அவரைப் பற்றி முஹம்மது இப்னு மஸ்லமாவிற்கு தெரிய வரவே அவர் தப்பித்துச் செல்வதற்கு வழிவிட்டார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற விவரம் வரலாற்றில் அறியப்படவில்லை.

குரைளாவினன் பொருட்களில் ஐந்தில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் ஒதுக்கிவிட்டு மீதத்தை தங்களின் தோழர்களுக்குப் பங்கிட்டார்கள். அதாவது, குதிரை வீரர்களுக்கு மூன்று பங்கும் (ஒரு பங்கு அவருக்கும் மற்ற இரு பங்கு குதிரைக்கும்) காலாட்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும் என நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஸஅது இப்னு ஜைது (ரழி) என்ற அன்சாரி தோழன் தலைமையில் கைதிகளை விற்று வர ஒரு குழுவை நபியவர்கள் நஜ்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று கைதிகளை விற்று குதிரைகளையும் ஆயுதங்களையும் வாங்கி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைதியாக இருந்த பெண்களில் தனக்கென ரைஹானா பின்த் அம்ர் இப்னு குனாஃபா என்பவரை எடுத்துக் கொண்டார்கள். இவர் நபியவர்களின் வாழ்நாள் வரை அவர்களுடன் இருந்தார் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (இப்னு ஹிஷாம்)

ஆனால், வேறு சிலர் கூறுவதாவது: நபி (ஸல்) இவரை விடுதலை செய்து, பின்பு ஹிஜ்ரி 6ல் திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது இவர் இறந்துவிட்டார். நபியவர்கள் இவரை பகீஃ மண்ணறையில் அடக்கம் செய்தார்கள். (தல்கீஹ்)

குரைளாவின் பிரச்சனை முடிந்தவுடன் ஸஅது இப்னு முஆத் (ரழி) தன் விஷயத்தில் செய்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகத்தான். ஸஅதின் வேண்டுதல் என்ன என்று இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இவருக்கென பள்ளிவாசலில் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்கள். நபியவர்கள் அவரை அங்கு தங்க வைத்து அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள். சில நாட்களில் அவரது காயம் வீங்கி உடைந்தது. அதிலிருந்து வழிந்த இரத்தம் கிஃபார் கிளையினருக்காக பள்ளியில் கட்டப்பட்டிருந்த கூடாரத்தில் பரவியது. அதைப் பார்த்து அக்கூடாரத்தில் இருந்தவர்கள் “இது என்ன! உங்கள் கூடாரத்திலிருந்து வருகிறதே!” என்று கேட்டனர். அங்கு சென்று பார்க்கையில் ஸஅது (ரழி) அவர்களின் காயம் உடைந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியில் அவர்கள் அக்காயத்தினாலேயே இறந்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)