பக்கம் - 384 -
ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பிச் சென்று விட்டார்கள். சில நாட்களுக்குப் பின் மக்காவில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரான அபூ பஸீர் (ரழி) என்பவர் காஃபிர்களிடமிருந்து தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார். இவர் குறைஷிகளின் தோழர்களான ஸகீப் கிளையைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்து வர குறைஷிகள் இருவரை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்” என்றனர். நபியவர்கள் அபூபசீரை அவ்விருவரிடமும் ஒப்படைத்து விட்டார்கள். அவ்விருவரும் அபூபசீரை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபா வந்து சேர்ந்தனர். தங்களது வாகனத்தை விட்டு இறங்கி தங்களுடன் கொண்டு வந்திருந்த பேரீத்தம் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அபூபஸீர் (ரழி) அவ்விருவல் ஒருவரிடம் “உனது வாள் மிக நன்றாக உள்ளதே!” என்றார். அதைக் கேட்ட அவன் அவ்வாளை உருவி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிகச் சிறந்த வாள். இதை நான் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கின்றேன்” என்றான். அதற்கு அபூ பஸீர் (ரழி) “நான் அதைப் பார்க்க வேண்டும். காண்பி!” என்றார். அவன் அவரிடம் அந்த வாளைக் கொடுக்கவே அதை வாங்கி ஒரே வெட்டில் அவனது கதையை அவர் முடித்துவிட்டார்.

இதைப் பார்த்த மற்றவன் வெருண்டோடி மதீனா வந்து சேர்ந்தான். பயந்த நிலையில் பள்ளிக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்து நபியவர்கள் இவன் ஏதோ ஒரு திடுக்கமான காட்சியைப் பார்த்து விட்டான் என்று கூறினார்கள். நபியவர்களுக்கருகில் வந்த அவன் “எனது நண்பன் கொலை செய்யப்பட்டு விட்டான். நானும் கொலை செய்யப்பட்டு விடுவேன்” என்று பதறினான். அந்நேரத்தில் அபூபசீரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உங்களது பொறுப்பை நிறைவேற்றி விட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் அனுப்பி விட்டீர்கள். பின்பு அல்லாஹ்தான் அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தான்” என்று கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள், “இவரது தாய்க்கு ஏற்பட்ட நாசமே! இவர் போரை மூட்டி விடுவார் போலிருக்கிறதே! இவரை யாராவது பிடிக்க வேண்டுமே” என்றார்கள். நபியவர்களின் இப்பேச்சை கேட்டு அவர்கள் தன்னை மீண்டும் காஃபிர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று அறிந்து கொண்ட அபூபஸீர் அங்கிருந்து வெளியேறி கடற்கரை ஓரமாக வந்து தங்கிக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் மக்காவில் இவரைப் போல் துன்பம் அனுபவித்து வந்த அபூஜந்தல் இப்னு சுஹைல் (ரழி) மக்காவிலிருந்து தப்பித்து இவருடன் வந்து சேர்ந்து கொண்டார். இவ்வாறே மக்காவில் முஸ்லிமானவர் ஒவ்வொருவராக பலர் அபூபஸீர் (ரழி) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். இவர்கள் ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவ்வழியாக வருவதைத் தெரிந்து கொண்டால் உடனடியாக அதைத் தாக்கி, பொருட்களைக் கொள்ளையிட்டு அதில் உள்ளவர்களைக் கொலை செய்து விடுவார்கள். இதனால் பெரும் துன்பத்திற்குள்ளான குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் தூதனுப்பி அல்லாஹ்விற்காகவும் இரத்த உறவுக்காகவும் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். யார் இஸ்லாமை ஏற்று உங்களிடம் வந்து விட்டார்களோ அவர் அபயம் பெற்றவராவார். (அவரைத் திரும்ப கேட்க மாட்டோம்) என்று கூறினர். அவர்களின் இக்கோரிக்கைக்கிணங்க நபியவர்கள் அந்த முஸ்லிம்களை மதீனாவிற்கு வரவழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இந்த ஒப்பந்தத்திற்குப் பின் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு குறைஷிகளின் முக்கிய வீரர்களும் பிரமுகர்களுமான அம்ர் இப்னு ஆஸ், காலித் இப்னு வலீத், உஸ்மான் இப்னு தல்ஹா போன்றவர்கள் இஸ்லாமைத் தழுவினர். இவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது “மக்கா தனது ஈரக் குலைகளை நம்மிடம் ஒப்படைத்து விட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.