பக்கம் - 386 -


நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.

நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது “முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்’ என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ரஸூல் என்று ஒரு வரியிலும், அல்லாஹ் என்று ஒரு வரியிலும் இந்த அமைப்பில் எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்
இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்’ ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா ழம் (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை எழுதி அனுப்பினார்கள். இமாம் தப் அக்கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பற்றி கூறியிருக்கிறார்கள். அந்த வாசகங்களை ஆழமாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது அக்கடிதம் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) எழுதிய கடிதமாக இருக்காது. மாறாக, மக்காவிலிருக்கும் போது, ஜஅஃபரும் மற்ற தோழர்களும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்தபோது அவர்களுடன் கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், அக்கடிதத்தின் இறுதியில் வரும் வாசகத்தில் “நான் உங்களிடம் எனது தந்தையின் சகோதரன் மகன் ஜஅஃபரை அனுப்பி இருக்கிறேன். அவருடன் முஸ்லிம்களில் ஒரு குழுவும் வருகிறது. அவர் உங்களிடம் வந்தால் அவரையும் அக்குழுவையும் விருந்தாளியாக கவனித்துக் கொள்ளுங்கள். அநியாயம் செய்வதை விட்டுவிடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கடிதம் மக்காவில் இருக்கும் போது எழுதப்பட்டது என்று விளங்க முடிகிறது.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) வாயிலாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் ‘அஸ்ஹம்’ என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!