பக்கம் - 405 -


“கைபர்’ என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 80 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால், இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும், நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது.

போருக்கான காரணம்

மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே, மற்ற இரண்டு எதிரிகளின் கணக்கைத் தீர்க்க நாடினார்கள். அப்போதுதான் அப்பகுதியில் அமைதியும், சாந்தியும், சமாதானமும் முழுமையாக நிலவ முடியும். அத்துடன் இரத்தம் சிந்தும் போர்களிலிருந்து முஸ்லிம்கள் ஓய்வு பெற்று இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்க முடியும்.

சதித்திட்டங்கள் தீட்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும் கைபர் நகரம் ஒரு மையமாக விளங்கியதால், நபி (ஸல்) அவர்கள் தங்களது கவனத்தை முதலாவதாக இதன் பக்கம் செலுத்தினார்கள்.

இந்நகரவாசிகள் மேற்கூறிய தன்மையுடையவர்கள் என்பதற்கு சில சான்றுகள்: (1) இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராகக் குறைஷிகளையும் மற்ற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். (2) முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும்படி குரைளா யூதர்களை தூண்டி விட்டவர்கள். (3) இஸ்லாமியச் சமூகத்திற்குள் தன்னை மறைத்து வாழும் புல்லுருவிகளான நயவஞ்சகர்களுடன் தொடர்பு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள். (4) முஸ்லிம்களின் மூன்றாவது எதிரியான கத்ஃபான் மற்றும் கிராம அரபிகளுடன் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விடுபவர்கள். (5) அவர்களும் முஸ்லிம்களுடன் போர் புரிவதற்கான பல தயாரிப்புகள் செய்து வந்தனர். (இவ்வாறு பல வழிகளில் முஸ்லிம்களைத் தொடர் சிரமங்களுக்கு ஆளாக்கியதுடன்) (6) நபியைக் கொலை செய்வதற்கு ஒரு திட்டத்தையும் தீட்டினர்.

ஆக, இவற்றைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் பல படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்கள்.

மேலும், இந்தச் சதிகாரர்களுக்கு தலையாக விளங்கும் ஸலாம் இப்னு அபுல் ஹுகைக், உஸைர் இப்னு ஜாம் ஆகியோரைக் கொல்வதும் நிர்பந்தமான ஒன்றாயிற்று.

ஆனால், இவை அனைத்தையும் விட பெரிய அளவில் யூதர்களைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. எனினும், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் யூதர்களை விட பலமும் பிடிவாதமும், வம்பும் விஷமமும் கொண்ட குறைஷிகள் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். தற்போது சமாதான உடன்படிக்கையால் குறைஷிகளின் எதிர்ப்பும், தாக்குதலும் முடிவுக்கு வந்துவிடவே, யூதர்களின் கணக்கைப் பார்ப்பதற்கான சரியான நேரம் முஸ்லிம்களுக்கு அமைந்தது.