பக்கம் - 406 -
கைபரை நோக்கி...

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: “நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடித்துத் திரும்பிய பின், மதீனாவில் துல்ஹஜ் மாதம் முழுதும், முஹர்ரம் மாதத்தில் சில நாட்களும் தங்கி விட்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்.”

திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்: “பின்வரும் இறைவசனத்தின் மூலம் அல்லாஹ் வாக்களித்த ஒன்றுதான் கைபர் போர்.

ஏராளமான பொருட்களை (போல்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். இதனை உங்களுக்கு அதி சீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (அல்குர்ஆன் 48:20)

இதில் கூறப்பட்டுள்ள ‘இதனை’ என்பது ஹுதைபிய்யா ஒப்பந்தத்தையும் ‘ஏராளமான பொருட்களை’ என்பது கைபரையும் குறிக்கிறது.

இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை

நயவஞ்சகர்களும் உறுதி குலைந்த நம்பிக்கையாளர்களும் ஹுதைபிய்யாவில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்டதால் அவர்கள் விஷயமாக அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு கட்டளை பிறப்பித்தான்.

(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில் (உங்களை நோக்கி) “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர எங்களை (அனுமதித்து) விடுங்கள்” என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்” என்றும் கூறுங்கள்! அதற்கவர்கள், (ம்அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை“) நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 48:15)

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் கைபருக்குப் புறப்பட்ட போது “போர் புரிய ஆசையுள்ளவர்கள் மட்டும் புறப்பட வேண்டும்” என அறிவித்தார்கள். ஆகவே, ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்த 1400 தோழர்கள் மட்டும் இப்போருக்காகப் புறப்பட்டனர்.

நபி (ஸல்) மதீனாவில் ‘சிபா இப்னு உருஃபுதா அல்கிஃபா’ (ரழி) என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஆனால், “நுமைலா இப்னு அப்துல்லாஹ் அல்லைஸி (ரழி) என்பவரை நபி (ஸல்) பிரதிநிதியாக நியமித்தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். எனினும் ஆய்வாளர்கள், முந்திய கூற்றையே மிகச் சரியானது என்கின்றனர்.

நபியவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்ட பின் அபூஹுரைரா (ரழி) இஸ்லாமை ஏற்று மதீனா வந்தார். சிபா உடன் ஸுப்ஹ் தொழுதுவிட்டு (இருவரும் நிலைமைகளை பரிமாறிக் கொண்டவுடன்) போருக்குச் செல்வதற்கான சாதனங்களை அபூ ஹுரைராவுக்கு சிபா (ரழி) தயார் செய்து கொடுத்தார்கள். அதற்குப் பின் அபூஹுரைரா (ரழி) அங்கிருந்து புறப்பட்டு நபியவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது கைபர் போர் முடிவுற்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் ஆலோசித்து அபூஹுரைராவிற்கும் அவருடன் வந்த தோழர்களுக்கும் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள்.