பக்கம் - 440 -
இந்தப் பதில்களையெல்லாம் கேட்ட அபூ ஸுஃப்யானின் கண்களுக்கு முன் உலகமே இருண்டு விட்டது. அவர் அலீ (ரழி) அவர்களிடம் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் கவலை தோய்ந்த தொனியிலும் “அபுல் ஹஸனே! நிலைமை மோசமாகிவிட்டது. எனக்கு ஏதாவது நல்ல யோசனை கூறுங்கள்” என்றார். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு பயன் தரும் எந்த விஷயத்தையும் நான் அறியமாட்டேன். எனினும், நீ கினானா கிளையினரின் தலைவனாக இருக்கிறாய். நீ எழுந்து சென்று “மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பும் அச்சமற்றத் தன்மையும் நிலவவேண்டும்” என்று அறிவிப்பு செய்! பிறகு, உனது ஊருக்கு சென்றுவிடு!” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர் “இதனால் எனக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரழி), “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது பயன் தரும் என்று நான் எண்ணவில்லை என்றாலும் என்னிடம் உனக்காக அதைத் தவிர வேறு யோசனை எதுவுமில்லை” என்று கூறினார். அபூ ஸுஃப்யான் அங்கிருந்து எழுந்து பள்ளிக்குச் சென்று “மக்களே! நான் மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு நிலவவேண்டும் என்று அறிவிப்பு செய்கிறேன்” என்று கூறிவிட்டு, தனது ஒட்டகத்தில் ஏறி மக்கா சென்றுவிட்டார்.

அபூ ஸுஃப்யான் குறைஷிகளிடம் வந்து சேர்ந்த போது “என்ன செய்தியை பெற்று வந்திருக்கிறீர்?” என்று அவர்கள் கேட்டனர். “நான் முஹம்மதிடம் சென்று பேசினேன். அவர் எந்த பதிலும் எனக்குக் கூறவில்லை. பின்பு அபூபக்ரிடம் சென்று பேசினேன். அவருடன் பேசியதில் எப்பயனுமில்லை. பின்பு உமரிடம் பேசினேன். அவர் நமக்கு மிகப்பெரிய எதிரியாக விளங்குகிறார். பின்பு அலீயிடம் சென்றேன். அவர் மிக மென்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு ஓர் ஆலோசனைக் கூறினார். அதன்படி நானும் செய்துவிட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த ஆலோசனை எனக்கு பயனளிக்குமா? அளிக்காதா? என்பது எனக்குத் தெரியாது” என்றார். “அவர் உனக்கு என்ன ஆலோசனை கூறினார்?” என்று குறைஷிகள் கேட்டனர்.

“மக்களுக்கு மத்தியில் நான் பாதுகாப்புத் தருகிறேன். (குறைஷிகளால் உங்களுக்கு இனி எந்த இடையூறும் ஏற்படாது)” என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் அறிவிப்புச் செய்யும்படி எனக்குக் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். “அதை முஹம்மது ஏற்றுக் கொண்டாரா?” என்று குறைஷியர் கேட்டனர். “இல்லை” என்று அபூ ஸுஃப்யான் கூறினார். “உனக்கு நாசம் உண்டாகட்டுமாக! அந்த ஆள் (அலீ) உன்னுடன் நன்றாக விளையாடி விட்டார்” என்று குறைஷிகள் கூறினர். அதற்கு அபூ ஸுஃப்யான், “இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கூறியதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்று கூறினார்.

மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

அறிஞர் தப்ரானியின் அறிவிப்பிலிருந்து நமக்குத் தெரிய வருவதாவது: குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர் என்ற செய்தி தனக்குக் கிடைப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே போருக்கான சாதனங்களைத் தயார் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவிற்கு உத்தர விட்டிருந்தார்கள். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஒரு தடவை அபூபக்ர் (ரழி), ஆயிஷா (ரழி) வீட்டிற்கு வந்த போது “எனதருமை மகளே! இது என்ன தயாரிப்பு?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது” என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறைஷிகளிடம் போர் புரிவதற்கான காலமுமில்லையே! நபி (ஸல்) அவர்கள் எங்குதான் செல்லப் போகிறார்கள்?” என்று அபூபக்ர் (ரழி) கேட்டதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதுபற்றி எனக்கு எந்த அறிவுமில்லை” என்று ஆயிஷா (ரழி) கூறிவிட்டார்கள். மூன்றாவது நாள் காலையில் ‘குஜாஆ’ கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு சாலிம் என்பவர் நாற்பது நபர்களுடன் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து, முன்னால் கூறப்பட்ட அந்தக் கவிகளைப் பாடினார். அப்போதுதான் உடன்படிக்கை மீறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.