பக்கம் - 442 -
அந்த கடிதத்தில்: “ஹாதிப் இப்னு அபூ பல்தஆ குறைஷிகளுக்கு எழுதுவது: நபி (ஸல்) உங்களை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. நபி (ஸல்) ஹாதிபை அழைத்தார்கள். “ஹாதிபே! இது என்ன?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள் கின்றேன். நான் மதம் மாறவுமில்லை. அதை மாற்றிக் கொள்ளவுமில்லை. நான் குறைஷிகளுடன் சேர்ந்துதான் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல. எனது குடும்பத்தினர்களும், உறவினர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அங்கு எனக்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடன் இருக்கும் மற்றவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அங்கு அவரது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். நான் குறைஷிகளுக்கு இந்த உதவியைச் செய்தால், அதனால் அவர்கள் எனது குடும்பத்தைப் பாதுகாப்பார்கள். அதற்காகவே நான் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்ய ஆசைப்பட்டேன்” என்று ஹாதிப் (ரழி) பதில் கூறினார். இந்தப் பதிலை கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி), “அல்லாஹ்வின் தூதரே! அவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள். அவர் நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார். அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். நான் உங்களின் பாவங்களை நிச்சயமாக மன்னித்து விட்டேன்” என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கூறினார்கள். நபியவர்களின் இந்தப் பதிலால் உமரின் கண்களிலிருந்து கண்ணீர் மல்கியது. “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள்” என உமர் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு ஒற்றர்கள் வழியாக செய்தி கடத்தப்படுவதையும் அல்லாஹ் தடுத்து விட்டான். முஸ்லிம்கள் போருக்குத் தயாராகி வருகிறார்கள் என்ற எந்தவித செய்தியும் குறைஷிகளுக்குக் கிடைக்கவில்லை.

மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 10ல் நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மதீனாவில் அபூ ருஹ்ம் கிஃபா (ரழி) என்ற தோழரை நபி (ஸல்) தனக்குப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

நபியவர்கள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்தில் அல்லது அதைத் தாண்டி ஓரிடத்தில் சென்று கொண்டிருந்த போது, நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபு (ரழி) தனது குடும்பத்தினருடன் அவர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் இஸ்லாமை ஏற்று நபியவர்களைச் சந்திக்க தனது குடும்பத்தார்களுடன் மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்து மதீனா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) ‘அப்வா’ என்ற இடத்தில் தங்கியிருந்த போது, நபியவர்களது பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் என்பவரும், மாமி மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையா ஆகிய இருவரும் வந்தனர்.