பக்கம் - 443 -
ஆனால், இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களை எப்போதும் இகழ்ந்து கொண்டிருந்ததாலும், அதிகம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததாலும் அவர்களைச் சந்திக்க, அவர்களுடன் பேச நபியவர்கள் மறுத்து விட்டார்கள். நபியவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! உங்களது பெரிய தந்தையின் மகனும், மாமி மகனும் உங்களின் புறக்கணிப்பால் நற்பேறு அற்றவர்களாக ஆகிவிட வேண்டாம். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். மேலும் அலீ (ரழி), “நீ நபியவர்களின் முன்பக்கமாக சென்று நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறியதைப் போன்று (கீழ்காணும் வசனங்களை) நீயும் கூறு, நபி (ஸல்) அவர்கள் பிறரைவிட தான் அதிக நற்பண்புள்ளவராக இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். (அதாவது, தனக்கு தீங்கிழைத்த தனது சகோதரர்களை நபி யூஸுஃப் (அலை) மன்னித்து விட்டார்கள் அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களும் நிச்சயம் மன்னிப்பார்கள்”) என்று அபூ ஸுஃப்யானிடம் கூறினார். அவ்வாறே அபூ ஸுஃப்யானும் செய்தார்.

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்.)” (அல்குர்ஆன் 12:91)

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

“இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.” (அல்குர்ஆன் 12:92)

என்ற வசனங்களைக் கூறினார்கள். அதன் பிறகு அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ்,

“இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்
முஹம்மதின் வீரர்களை” வீழ்த்த வேண்டும் என்பதற்காக,
நான் போர்க்கொடி சுமந்த போது
இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்
இது எனக்கு சிறந்த நேரம்
நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்
அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்
என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்.
நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே
அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி
அல்லாஹ்வை காட்டித் தந்தார்.”

என்ற கவிதைகளைப் பாடிக்காட்டினார்.

அதற்கு நபியவர்கள், அவரது நெஞ்சில் அடித்து “நீதான் என்னை ஒவ்வொரு இடங்களிலும் துரத்திக் கொண்டிருந்தாய்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)