பக்கம் - 484 -
மற்றொருபுறம் நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கமடைந்தார்கள். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றி தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. இதனால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்குப் பெரும் பயன்களும் கிடைத்தன. ஒருக்கால் ரோமர்கள் வந்து போர் நடந்திருந்தால் கூட, இந்தளவு நன்மைகள் கிடைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது.

தபூக்கிற்கு அருகிலிருந்த அய்லா பகுதியின் தலைவர் யுஹன்னா இப்னு ரூஃபா தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்து கொடுத்ததுடன் ஜிஸ்யாவையும் நிறைவேற்றினார். மேலும், ‘ஜர்பா’ பகுதியினரும் ‘அத்ருஹ்’ பகுதியினரும் ஒப்பந்தம் செய்து ஜிஸ்யாவையும் வழங்கினர். நபி (ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். இவ்வாறே மீனா பகுதி மக்களும் தங்கள் பகுதியில் விளையும் கனிவர்க்கங்களில் 1/4 பங்கை வழங்கி விடுவதாக சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அய்லாவின் தலைவருக்கு நபி (ஸல்) எழுதிக் கொடுத்த ஒப்பந்தமாவது:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்தும் யுஹன்னா இப்னு ருஃபாவுக்கும் அய்லாவாசிகளுக்கும் வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாகும் இது. கடலில் செல்லும் இவர்களது கப்பல்களுக்கும், பூமியில் செல்லும் இவர்களது பயணக் கூட்டங்களுக்கும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பும் முஹம்மதுடைய பாதுகாப்பும் உண்டு. மேலும், ஷாம் நாட்டிலும் இவர்களது கடல் பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உண்டு. ஆனால், இவர்களில் யாராவது குழப்பம், கலகம் செய்தால் அவரது உயிர், பொருள் பாதுகாக்கப்படாது. அவரை அடக்குபவருக்கு அவரது பொருள் சொந்தமாகிவிடும். இவர்கள் தண்ணீருக்காக செல்லும் போது யாரும் தடுக்கக் கூடாது கடலிலோ தரையிலோ பயணிக்கும் போது யாரும் குறுக்கிடக் கூடாது.”

அடுத்து, இருபத்து நான்கு குதிரை வீரர்களுடன் தூமதுல் ஜந்தலின் தலைவர் உகைதிர் என்பவரை பிடித்து வருவதற்காக காலித் பின் வலீதை நபி (ஸல்) அனுப்பினார்கள். மேலும், “நீ அவரை சந்திக்கும் போது அவர் ஒரு மாட்டை வேட்டையாடிக் கொண்டிருப்பார்” என்றும் நபி (ஸல்) காலிதிடம் கூறினார்கள். காலித் (ரழி) உகைதின் கோட்டைக்கு அருகில் சென்று தாமதித்தார். அப்போது ஒரு மாடு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வெளியேறி உகைதின் கோட்டைக் கதவை கொம்புகளால் உராய்ந்து கொண்டிருந்தது. உகைதிர் அதை வேட்டையாடி பிடிப்பதற்காகக் கோட்டைக்கு வெளியே வந்தார். அன்று பௌர்ணமி இரவாக இருந்தது. காலித் தனது படையுடன் சென்று உகைதிரை பிடித்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகள் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜிஸ்யா தருவதாகவும் ஒப்புக் கொண்டார். முன் சென்றவர்களுடன் ஒப்பந்தம் செய்தது போன்று நபி (ஸல்) இவருடனும் செய்து கொண்டார்கள்.

ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்கள் எல்லாம் “இனி நம்முடைய பழைய தலைவர்களை நம்புவதில் பலனில்லை அந்தக் காலம் மலையேறி விட்டது இனி முஸ்லிம்களுக்குத்தான் நாம் பணிய நேரிடும்” என நன்கு புரிந்திருந்தனர். இவ்வாறே இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து விரிவாகி ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது. பெரும்பாலான அரபு பகுதியிலுள்ள ரோம ஆளுநர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.