பக்கம் - 509 -
இஸ்லாமிய அழைப்புப் பணி தோன்றுவதற்கு முன்னதாக உலகை அறியாமை ஆட்சி செய்தது. மனித உள்ளங்கள் சீர்கெட்டு பண்பாடின்றி இருந்தன. நன்மை தீமைகளின் அளவு கோல்கள் கோளாறாயிருந்தன. அநியாயம் புரிதலும் அடிமைபடுத்துதலும் சமுதாயத்தில் பரவி இருந்தன. ஒருபுறம் சிலர் வரம்பு மீறிய செல்வத்தில் கொழிக்க, மறுபுறம் ஏழைகள் வறுமையில் வாடினர்.

எத்தனையோ முந்திய மார்க்கங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் குளறுபடிகளும், குழப்பங்களும், பலவீனங்களும் வேரூன்றி விட்டதால், மனித இதயங்களை அவை ஆட்சி செலுத்த முடியவில்லை. அவை உயிரற்ற, உணர்ச்சியற்ற, இறுகிப்போன சடங்குகளாகவே மாறிவிட்டன. இதனால் மனிதர்களை இறைநிராகரிப்பும் வழிகேடுகளும் சூழ்ந்திருந்தன. இஸ்லாமிய அழைப்புப் பணி, மனித சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பணிகளைச் சிறப்பாக செவ்வனே செய்தது கற்பனை, வீண் குழப்பங்கள், பிறருக்கு அடிமையாகுதல், விஷமம், கலகம், கெட்ட குணங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றிலிருந்து மனித உயிரை தூய்மைப்படுத்தியது.

அநியாயம், அட்யூழியம், அத்துமீறல், பிரிந்து சிதறி ஒற்றுமையின்றி வாழுதல், நிற, இன பேதங்கள் பாராட்டுதல், அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகுதல், குறிகாரர்கள், ஜோசியர்களால் இழிவடைதல் ஆகிய அனைத்திலிருந்தும் இஸ்லாமிய அழைப்புப் பணி மனித சமுதாயத்தைக் காப்பாற்றியது. ஒழுக்கம், கட்டுப்பாடு, அக, புற தூய்மை, முழு சுதந்திரம், புதுமை, கல்வியறிவு, தெளிவு, உறுதி, பிடிப்பு, இறை நம்பிக்கை, மனித நேயம், வாழ்க்கையை வளப்படுத்த, மேம்படுத்த, உயர்வாக்கத் தொடர்ந்து முயற்சித்தல், அவரவர் உரிமையைக் கொடுத்தல் என்ற உறுதிமிக்க அஸ்திவாரத் தூண்களின் மீது மனித சமுதாயக் கட்டடத்தை இஸ்லாம் நிறுவியது. இதுவரை கண்டிராத வளமிக்க எழுச்சிகளையும், மாற்றங்களையும் இந்த அழைப்புப் பணியின் முன்னேற்றத்தால் அரபுலகம் அடைந்தது. தனது வாழ்க்கை வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒளி வெள்ளத்தை இந்நாட்களில் அரபுலகம் கண்டது.