பக்கம் - 531 -
மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷை ஜைதுப்னு ஹாரிஸா (ரழி) மணமுடித்திருந்தார். ஜைதை சிறு வயது முதலே நபி (ஸல்) வளர்த்து வந்ததால் இவரை ஜைத் இப்னு முஹம்மது (முஹம்மதின் மகன் ஜைது) என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இத்தம்பதியடையே சுமுகமான உறவு நிகழவில்லை. இதனால் ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்துவிட எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசித்தார்.

ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம். ஆகவே, ஜைது (ரழி) தலாக் விஷயமாக பேசிய போது தலாக் விடவேண்டாம் என நபி (ஸல்) அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) உணர்ந்த இந்த அச்சமும் தடுமாற்றமும் அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை. எனவே, நபியவர்களை கண்டித்து அடுத்துவரும் வசனத்தை அருளினான்.

(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனதில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) (அல்குர்ஆன் 33:37)

ஆனால், நடக்க வேண்டியது நடந்து விட்டது. ஜைது (ரழி) தன் மனைவியை தலாக் கொடுத்து விட்டார், நபி (ஸல்) பனூ குறைளா யூதர்களை முற்றுகையிட்ட காலக்கட்டத்தில் ஜைனப் (ரழி) அவர்களுடைய இத்தா முடிந்தவுடன் நபி (ஸல்) அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை நபியவர்களின் விருப்பத்திற்கு விடாமல் தானே மணமுடித்து வைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக, இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். (அல்குர்ஆன் 33:37)