பக்கம் - 6 -
நாடு துறந்த கஹ்லான் வமிசத்தினர் நான்கு வகைப்படுவர்:

1) அஜ்து கிளையினர்

இவர்கள் தங்களின் தலைவர் ‘இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ’ என்பவரின் ஆலோசனைக்கிணங்க நாடு துறந்தனர். இவர்கள் யமன் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து, தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர். இவ்வமிசத்தில் யார் எங்கு தங்கினர் என்ற விபரங்கள் பின்வருமாறு:

இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் ‘உமான்’ (ஓமன்) நாட்டில் சென்று தங்கினார். இவர்களை உமான் நாட்டு அஜ்து வமிசத்தினர் என்று சொல்லப்படுகின்றது.

நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் ‘துஹாமா’ என்ற இடத்திற்குச் சென்று தங்கினர். இவர்களை ஷனூஆ அஜ்து வமிசத்தினர் எனக் கூறப்படும்.

ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியாஃ என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்குச் சென்று ‘ஸஃலபியா’ மற்றும் ‘தூ கார்’ என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தங்கினார். அவரது பிள்ளைகள் பேரன்கள் பெரியவர்களாகி நன்கு வலிமை பெற்றவுடன் அங்கிருந்து புறப்பட்டு மதீனா நகர் வந்து தங்கினார். இந்த ஸஃலபாவுடைய மகன் ஹாஸாவின் பிள்ளைகள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இருவரும். இவ்விருவல் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வமிசங்கள் தோன்றின.

அஜ்து வமிசத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹி ஜாஸ் பகுதியில் ‘மர்ருல் ளஹ்ரான்’ என்னும் இடத்தில் தங்கினர். சிறிது காலத்திற்குப் பின் மக்கா மீது படையெடுத்து அங்கு வசித்த ஜுர்ஹும் வமிசத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்களது ஊராக ஆக்கிக் கொண்டனர். இந்த ஹாஸாவின் வமிசத்திற்கு ‘குஜாஆ’ என்ற பெயரும் உண்டு.

ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தங்கினார். இவரது சந்ததியினர்தான் வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர். சிரியா வருவதற்கு முன் ஜஃப்னா இப்னு அம்ர் ஹி ஜாஸ் பகுதியில் உள்ள ‘கஸ்ஸான்’ என்ற கிணற்றுக்கருகில் குடியேறி சில காலம் தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு ‘கஸ்ஸானியர்’ என்ற பெயரும் வந்தது.

கஅப் இப்னு அம்ர், ஹாஸ் இப்னு அம்ர், அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும் மேற்கூறப்பட்ட பெரியகோத்திரங்களுடன் இணைந்து ஹி ஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்.

2) லக்ம் மற்றும் ஜுதாம்

இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர். லக்ம் வமிசத்தில் வந்த நஸ்ர் இப்னு ரபீஆ என்பவரின் சந்ததியினர்தான் ‘ஹீரா’ நாட்டை ஆண்ட அரசர்கள். அந்த அரசர்களை ‘முனாதிரா’ என்று அழைக்கப்பட்டது.

3) பனூ தைய்

அஜ்து வமிசத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன் இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிக்குச் சென்று அஜஃ, சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர். பிற்காலத்தில் அந்த மலைகளுக்கு ‘தைய் மலைகள்’ என்ற பெயர் வந்தது.