பக்கம் - 7 -
4) கின்தா

இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர். அங்கு அவர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படவே மீண்டும் யமன் நாட்டில் ‘ஹழ்ர மவ்த்’ எனும் நகரில் குடியேறினர். அங்கும் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படவே, அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கத்தை நிறுவினர். ஆனால், சில காலங்களுக்குள்ளாகவே அவர்களது அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல் போயிற்று.

ஹிம்யர் வமிசத்தைச் சேர்ந்த ‘குழாஆ’ என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி ‘மஷாஃபுல் இராக்’ என்ற பகுதியில் ‘பாதியத்துஸ் ஸமாவா’ என்னும் ஊரில் குடியேறினர். குழாஆ வமிசத்தைச் சேர்ந்த சில பிரிவினர் ‘மஷாஃபுஷ் ஷாம்’ என்ற பகுதியிலும் ஹி ஜாஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும் குடியேறினர்.

இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டனார் நபி இப்றாஹீம் (அலை) ஆவார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள ‘உர்’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பம், உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமய சமூக பண்பாடுகள் குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன.

இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது ஊரிலிருந்து வெளியேறி ஹாரான் அல்லது ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினார்கள். சில காலத்திற்குப் பின் அங்கிருந்தும் புறப்பட்டு ஃபலஸ்தீனம் நாட்டில் குடியேறினார்கள். ஃபலஸ்தீனை தனது அழைப்புப் பணிக்கு மையமாக ஆக்கிக்கொண்டு அங்கும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனின் பக்கம் அழைத்தார்கள். ஒரு முறை மனைவி சாராவுடன் அழைப்புப் பணிக்காக அருகிலுள்ள ஓர் ஊருக்குச் சென்றார்கள். அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த அவ்வூரின் அநியாயக்கார அரசன், அவர்களை அழைத்து வரச்செய்து அவர்களுடன் தவறான முறையில் நடக்க முயன்றான். அன்னை சாரா அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அவன் சாராவை நெருங்க முடியாதபடி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான். அல்லாஹ்விடம் சாரா மிக மதிப்பிற்குரியவர்; மேலும், நல்லொழுக்கச் சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அநியாயக்காரன், சாராவின் சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாராவுக்கு பணி செய்ய ஓர் அழகிய அடிமைப் பெண்ணை வழங்கினான். சாரா அவர்கள் அப்பெண்ணை தனது கணவர் இப்றாஹீமுக்கு வழங்கி விட்டார்கள். அப்பெண்மணிதான் அன்னை ஹாஜர் ஆவார். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இப்றாஹீம் (அலை) தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்குத் திரும்பினார்கள். அங்கு ஹாஜரின் மூலமாக ‘இஸ்மாயீல்’ என்ற மேன்மைக்குரிய ஒரு மகனை, அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கினான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க இப்றாஹீம் (அலை) தங்களது மகன் இஸ்மாயீல் (அலை) மற்றும் ஹாஜரை அழைத்துக் கொண்டு மக்கா வந்தார்கள்.