பக்கம் - 8 -
அக்காலத்தில் அங்கு இறை இல்லமான ‘கஅபா’ கட்டடமாக இருக்கவில்லை. கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது. வெள்ளம் வரும்போது கஅபா இருந்த அந்த மேட்டுப் பகுதியின் வலது இடது இரு ஓரங்களைத் தண்ணீர் அரித்து வந்தது. கஅபத்துல்லாஹ்வின் அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமர வைத்து, சிறிது பேரீத்தங்கனிகள் இருந்த ஒரு பையையும், தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு, இப்றாஹீம் (அலை) ஃபலஸ்தீனம் திரும்பினார்கள். சில நாட்களில் அவ்விருவரின் உணவான பேரீத்தங்கனிகளும் தண்ணீரும் தீர்ந்துவிட்டன. அல்லாஹ் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் அற்புதமான ‘ஜம்ஜம்’ ஊற்றை அவ்விருவருக்காக தோன்றச் செய்தான். (ஸஹீஹுல் புகாரி)

இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும்போது (தண்ணீர் இருப்பதைப் பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர். சில வரலாற்று ஆசிரியர்கள் “இந்த இரண்டாவது ஜுர்ஹும் வமிசத்தினர் முன்பிருந்தே மக்காவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி, ஜம்ஜம் கிணறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறினர்” என்றும் கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால் நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளலாம். இமாம் புகாரி (ரஹ்) கூறியிருப்பதாவது:

இப்றாஹீம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதற்கு முன்பே மக்கா வழியாக இரண்டாவது ஜுர்ஹும் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள். அன்னை ஹாஜர் மக்காவில் வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்பட்டபின், அதாவது இஸ்மாயீல் (அலை) வாலிபமடைவதற்கு முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள். இவ்வாறே ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது. இதிலிருந்து இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அதே நேரம், தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் நான்கு முறை சென்றதற்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.

அந்த நான்கு முறைகள் வருமாறு:

1) இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். நபி இப்றாஹீம் (அலை), அவர்கள் தமது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்வுக்கு தியாகம் செய்வதுபோல் கனவு ஒன்று கண்டார்கள். அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா வந்தார்கள். இது குறித்து பின்வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது நாம் “இப்றாஹீமே!” என நாம் அழைத்து “உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, “நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்). ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37 : 103-107)