பக்கம் - 9 -
இஸ்ஹாக்கைவிட இஸ்மாயீல் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் என்று தவ்றாத்” வேதத்தில் ‘தக்வீன்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலிருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு முன் நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. ஏனெனில், மேன்மைமிகு குர்ஆனில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுதும் கூறப்பட்ட பிறகு அதையடுத்தே இஸ்ஹாக் (அலை) பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டுள்ளது.

ஆக, இதிலிருந்து இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒருமுறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும், அப்போது இஸ்மாயீல் (அலை) வாலிபமடையவில்லை என்பதும் தெரிய வருகிறது.

மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமாவது:

2) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை ஜுர்ஹும் கோத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். இத்திருமணத்திற்கு பிறகே அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்கு மக்கா வந்தபோது மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள். இஸ்மாயீல் (அலை) அப்போது மக்காவில் இல்லை. இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை, சுகநலன்கள் பற்றியும் விசாரித்தார்கள். அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும் பற்றி முறையிட்டார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் “இஸ்மாயீல் வந்தால், தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக, அவரிடம் நீ சொல்!” என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இஸ்மாயீல் (அலை) வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை விவத்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயீல் (அலை) மணவிலக்கு செய்துவிட்டார். அதற்குப் பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் தலைவர் ‘முழாத் இப்னு அம்ர்’ என்பவரின் மகளைத் திருமணம் செய்தார்.

3) இஸ்மாயீல் (அலை) அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டபின் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) வீட்டில் இல்லை. நபி இப்றாஹீம் (அலை) தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையைப் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு “அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் “இஸ்மாயீல் (அலை) வந்தால் தனது வீட்டு வாசலின் நிலையை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயீலிடம் சொல்!” என்று சொல்லிவிட்டு ஃபலஸ்தீனம் சென்றார்கள்.