முஅத்தா போர்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் சிரியாவை சேர்ந்த புஸ்ராவில் உள்ள கிராக்கியஸ் மன்னரின் கவர்னரிடம் ஒரு தூதுவரைஅனுப்பினார்கள். கி.பி. 629ல் பெருமானாரின் தூது செய்தியை ஹாரிஸ் இப்னு உமைருல் அஸைதி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொதிக்கும் பாலைவனங்களையும் பள்ளத்தாக்குகளையும் தனியாக குதிரை மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து தற்பொழுது ஜோர்டானில் உள்ள அல்கரக்கிற்க்கு அருகிலுள்ள முஅத்தா என்ற இடத்திற்க்கு வந்து சேர்ந்தார். பெருமானாரின் கடிதத்தை கொடுத்ததும் அந்த தூதுவர் கருணையின்றி கொலை செய்யப்பட்டார். தூதுவரை கொலை செய்யக்கூடாது என்ற பொது நீதியை கடைப்பிடிக்காத இந்த கொடிய செயலுக்காக தமது வளர்ப்பு மகனான ஜைது பின் ஹாரிஸாவின் தலைமையில் மூவாயிரம் வீரர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் அனுப்பினார்கள். அவர்களை வழியனுப்பும் போது பெருமானார் “எதிரிகளைச் சார்ந்த பெண்களையும் சிறுவர்களையும் முதியோர்களையும் கொலை செய்யக் கூடாது, கட்டிடங்களை இடிக்க கூடாது, மரங்களை அழிக்க கூடாது. அல்லாஹ் உங்களுடன் இருப்பானாக” என்று கூறினார்கள்.

மதினாவிலிருந்து புறப்பட்ட படையினர் மனித நடமாட்டமற்ற வட அரேபிய பாலைவனங்கள் வழியாக சென்று இப்பொழுது ஜோர்டானை சேர்ந்த முஅத்தாவிற்க்கு வந்தடைந்தனர். சுமார் இரண்டு லட்சம் வீரர்களை கொண்ட ரோமப் படையினர் வெறும் மூவாயிரம் முஸ்லீம் படையினருடன் போரிட்ட முஅத்தா போர்களம் இது தான்.

பெருமானாரின் கொடியை தாங்கி எதிரிகளின் நடுவில் முன்னேறிய ஜைதுபின் ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக வீரமாக போராடி வீர மரணம் அடைந்தார். அதற்க்கு பின் ஜாபர் பின் அபுதாலிபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடியை பெற்றுக் கொண்டு எதிரிகளின் நடுவில் நுழைந்தார். அவரது கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்ததும் அந்த கொடியை தன் கக்கத்தில் இறுக்கிக் கொண்டு முன்னேறினார். அவரது கால்களும் அதே இடத்தில் வெட்டப்பட்டது அவரும் வீரமரணம் அடைந்தார். திடீரென முன்னேறி வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹ ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அந்த கொடியை தாங்கி எதிரிகளின் மீது பாய்ந்தார். அவரும் இதே இடத்தில் வீர மரணம் அடைந்தார்.

இங்கு எழுந்து நிற்ப்பது அவர்களது கல்லறைகள் அல்ல. வீரமரணத்திற்க்கு நினைவாக எழுப்பபட்ட அடையாளங்களாகும். அந்த மூன்று ஷஹாபாக்களின் மரணச் செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஷஹாபாக்களின் ஆத்மாக்கள் சொர்கத்திற்க்கு உயர்த்தபட்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். மூன்று படைத்தலைவர்களும் இறைவனடி சேர்ந்ததும் சுறுசுறுப்பும் திறமையும் உள்ள ஹாலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத் தலைமையேற்று படையினரை ஒருங்கிணைத்தார். மதினாவிலிருந்து துணைப்படையினர் வந்திருப்பதாக எண்ணிய ரோமப் படையினர் போர்களத்தைவிட்டு திரும்பி சென்றனர். படைபலம் அல்ல இறைவனுடைய உதவிதான் வெற்றிக்கு அடிப்படை என்பது இதன் மூலம் நிரூபிக்கப் பட்டுவிட்டது.