901. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {تُوُفِّيَ رَجُلٌ مِنَّا، فَغَسَّلْنَاهُ، وَحَنَّطْنَاهُ، وَكَفَّنَّاهُ، ثُمَّ أَتَيْنَا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: تُصَلِّي عَلَيْهِ؟ فَخَطَا خُطًى، ثُمَّ قَالَ: " أَعَلَيْهِ دَيْنٌ؟ " قُلْنَا: دِينَارَانِ، فَانْصَرَفَ، فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ، فَأَتَيْنَاهُ، فَقَالَ أَبُو قَتَادَةَ: اَلدِّينَارَانِ عَلَيَّ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أُحِقَّ الْغَرِيمُ وَبَرِئَ مِنْهُمَا الْمَيِّتُ؟ " قَالَ: نَعَمْ، فَصَلَّى عَلَيْهِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
901. ஒருவர் இறந்து விட்டார். நாங்கள் அவரைக் குளிப்பாட்டி, நறுமணம் பூசி, கஃபன் ஆடையிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துமாறு கோரினோம். அவர்கள் ஓர் அடி (முன்) எடுத்து வைத்துவிட்டு, ``இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?'' எனக் கேட்டார்கள்.
``இரண்டு தீனார் கடன் உள்ளது'' என நாங்கள் கூறினோம்.
(இதனைக் கேட்ட) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டார்கள். அப்போது, அபூ கதாதா அந்தக் கடனை, தான் பொறுப்பேற்று, ``அந்த இரண்டு தீனாருக்கும் நான் பொறுப்பேற்கிறேன்'' எனக் கூறினார்.
பின்னர், ``கடன்காரருக்கு உரிமை கிடைத்து விட்டது! இந்த மைய்யித்தும் அதனை விட்டு விலகிக் கொண்டது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அதற்கவர்,
``ஆமாம்'' எனக் கூறினார்.
உடனே இறைத்தூதர்(ஸல்) அதற்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
902. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: "هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ؟" فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى عَلَيْهِ، وَإِلَّا قَالَ: "صَلُّوا عَلَى صَاحِبِكُمْ" فَلَمَّا فَتَحَ اللهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ: "أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ، وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَيَّ قَضَاؤُهُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {فَمَنْ مَاتَ وَلَمْ يَتْرُكْ وَفَاءً}.
902. கடனாளியாக உள்ள யாருடைய ஜனாஸாவேனும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ``இவர் தன் கடனைப் பூர்த்தி செய்ய ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?'' எனக் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளார் எனக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லை என்றால், ``உங்கள் நண்பருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறிவிடுவார்கள்.
பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளைக் கொடுத்த பின்னர், ``நான் முஸ்லிம்களின் உயிர்கள் மீது அதிக உரிமை பெற்றவன். யாரேனும் இறந்துவிட்டு அவருக்குக் கடன் இருந்தால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பாகும்'' என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீயின் மற்றோர் அறிவிப்பில், ``இறந்தவர் தன் கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்லவில்லையோ (அவருக்கு நான் பொறுப்பேற்கிறேன்)'' என உள்ளது.
903. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا كَفَالَةَ فِي حَدٍّ} رَوَاهُ الْبَيْهَقِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.بَابُ الشَّرِكَةِ وَالْوَكَالَةِ
903. ``தண்டனையில் பொறுப்பேற்க அனுமதியில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
904. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {قَالَ اللهُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
904. ``இரண்டு பங்குதாரர்களில் ஒருவருக்கொருவர் மோசடி செய்யாமல் இருக்கும் காலம் வரை அவர்களுக்கிடையே நான் மூன்றாம் பங்குதாரராய் இருக்கிறேன். அவர்களில் யாரேனும் ஒருவர் மோசடி செய்தால், அவர்களிடமிருந்து நான் விலகிக் கொள்வேன்'' என அல்லாஹ் கூறுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
905. وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ الْمَخْزُومِيِّ {أَنَّهُ كَانَ شَرِيكَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الْبَعْثَةِ، فَجَاءَ يَوْمَ الْفَتْحِ، فَقَالَ: "مَرْحَباً بِأَخِي وَشَرِيكِي} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَةَ.
905. `நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் மக்கா வெற்றிக்கு முன்பு (வியாபாரத்தில்) பங்குதாரராக இருந்தேன். நான் மக்கா வெற்றியன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்ததும், ``என் சகோதரரே! என் பங்குதாரரே! வருக!'' என்று கூறினார்கள் என அஸ் ஸாயிப் அல் மக்ஸூமி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா
906. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {اِشْتَرَكْتُ أَنَا وَعَمَّارٌ وَسَعْدٌ فِيمَا نُصِيبُ يَوْمَ بَدْرٍ..} اَلْحَدِيثَ. رَوَاهُ النَّسَائِيُّ وَغَيْرُهُ.
906. ``நானும், அம்மார் மற்றும் ஸஅத் ஆகியோரும் பத்ரு நாளன்று கிடைத்த (கனீமத்)தில் கூட்டாய் இருந்தோம்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: நஸயீ
குறிப்பு: கனீமத் என்பது இறைமறுப்பாளர்களுக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் இடையில் நடக்கும் போரில், இறைநம்பிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் குறிக்கிறது.
907. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا- {قَالَ: أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: "إِذَا أَتَيْتَ وَكِيلِي بِخَيْبَرَ، فَخُذْ مِنْهُ خَمْسَةَ عَشَرَ وَسْقًا} رَوَاهُ أَبُو دَاوُدَ وَصَحَّحَهُ.
907. நான் கைபர் செல்ல நாடியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ``நீ கைபர் சென்றால், அங்கு என் பொறுப்பாளரிடம் பதினைந்து வஸக் பேரீச்சம்பழம் வாங்கிக் கொள்!'' என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
908. وَعَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مَعَهُ بِدِينَارٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَّةً..} اَلْحَدِيثَ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي أَثْنَاءِ حَدِيثٍ، وَقَدْ تَقَدَّمَ.
908. தமக்காக ஒரு தீனாருக்கு குர்பானிப் பிராணி வாங்கி வருமாறு என்னை இறைத்தூதர்(ஸல்) அனுப்பினார்கள் என உர்வா அல் பாரிக்கீ(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: புகாரீ
குறிப்பு: ஹதீஸ் முழுவதையும் அறிவதற்கு இந்நூலின் 840 ஆம் ஹதீஸைக் காண்க!
909. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {بَعَثَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ عَلَى الصَّدَقَةِ..} اَلْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
909. உமர்(ரலி) அவர்களை `ஜகாத்' வசூலிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) நியமித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
910. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ، وَأَمَرَ عَلِيًّا أَنْ يَذْبَحَ الْبَاقِيَ} اَلْحَدِيثَ. رَوَاهُ مُسْلِمٌ.
910. இறைத்தூதர்(ஸல்) அறுபத்து மூன்று ஒட்டகங்களை அறுத்துவிட்டு மீதத்தை அறுக்கும்படி அலீ(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: புகாரீ
குறிப்பு: ஹதீஸ் முழுவதையும் அறிவதற்கு இந்நூலின் 760 ஆம் ஹதீஸைக் காண்க!
911. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي قِصَّةِ الْعَسِيفِ. قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى اِمْرَأَةِ هَذَا، فَإِنْ اِعْتَرَفَتْ فَارْجُمْهَا..} الْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الْإِقْرَارِ
911. பணியாள் ஒருவர் தம் மனைவி விபச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறுகையில், ``உனைஸே! இவரின் மனைவியிடம் செல்! அவள் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டால், கல் எறிந்து (கொன்று) விடு!'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: ஹதீஸ் முழுவதையும் அறிவதற்கு இந்நூலின் 1232 ஆம் ஹதீஸைக் காண்க!
912. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {قُلِ الْحَقَّ، وَلَوْ كَانَ مُرًّا} صَحَّحَهُ اِبْنُ حِبَّانَ فِي حَدِيثٍ طَوِيلٍ.بَابُ الْعَارِيَةِ
912. ``கசப்பாய் இருப்பினும், நீர் உண்மையையே பேசும்!'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
913. عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
913. ``பிறரிடமிருந்து ஒரு பொருளை வாங்கியவர் அதைத் திரும்பக் கொடுக்காதவரை, அவரே அதற்குப் பொறுப்பாளியாவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத் அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
914. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنْ اِئْتَمَنَكَ، وَلَا تَخُنْ مَنْ خَانَكَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَاسْتَنْكَرَهُ أَبُو حَاتِمٍ الرَّازِيُّ.
914. `` உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உங்களிடம் ஒப்படைத்தவரிடமே கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு மோசடி செய்தவருக்குக்கூட நீங்கள் மோசடி செய்யாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் அபூ ஹாதம் இதனை `முன்கர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது இரவல் தரும் பொருட்கள் அனைத்திற்கும் பொருந்தும் என ஹதீஸ் கலை வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
915. وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَتَتْكَ رُسُلِي فَأَعْطِهِمْ ثَلَاثِينَ دِرْعاً"، قُلْتُ: يَا رَسُولَ اللهِ! أَعَارِيَةٌ مَضْمُونَةٌ أَوْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ؟ قَالَ: بَلْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
915. ``உன்னிடம் என் தூதர்கள் வந்தால், அவரிடம் நீ முப்பது கேடயங்களைக் கொடுத்தனுப்பு'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! இந்த இரவலுக்கு விலை கொடுக்கப்படுமா? அல்லது இது திரும்பக் கொடுக்கப்படும் இரவலா?'' என நான் கேட்டேன்.
``திரும்பக் கொடுக்கப்படும் இரவல்தான்'' என்று கூறினார்கள் என யஃலா இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
916. وَعَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتَعَارَ مِنْهُ دُرُوعاً يَوْمَ حُنَيْنٍ. فَقَالَ: أَغَصْبٌ يَا مُحَمَّدُ؟ قَالَ: بَلْ عَارِيَةٌ مَضْمُونَةٌ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
916. ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) சில கேடயங்களைத் தம்மிடம் இரவல் வாங்கியபோது, ``முஹம்மதே! இது (போரின்) கொள்ளைப் பொருளா? அல்லது இரவலா?'' என நான் கேட்டேன்.
``இல்லை! (திரும்பக் கொடுத்துவிடுவதாகப்) பொறுப்பேற்றுக் கொண்ட இரவல்'' என்று இறைத்தூதர்(ஸல்) தன்னிடம் கூறினார்கள் என ஸஃப்வான் இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத் மற்றும் நஸயீ
இம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
917. وَأَخْرَجَ لَهُ شَاهِدًا ضَعِيفًا عَنِ ابْنِ عَبَّاسٍ.بَابُ الْغَصْبِ
917. ``மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக `ளயீஃப்' எனும் தரத்தில் ஹதீஸ் ஒன்றையும் இமாம் ஹாகிம்(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
918. عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ اِقْتَطَعَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْماً طَوَّقَهُ اللهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
918. ``அநியாயமாக (பிறரின்) பூமியில் ஓர் அங்குலத்தை எடுப்பவனின் கழுத்தில், ஏழு பூமிகளை மாலையாக மறுமையில் அல்லாஹ் போட்டுவிடுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
919. وَعَنْ أَنَسٍ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَمَعَ خَادِمٍ لَهَا بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ، فَكَسَرَتِ الْقَصْعَةَ، فَضَمَّهَا، وَجَعَلَ فِيهَا اَلطَّعَامَ. وَقَالَ: "كُلُوا" وَدَفَعَ الْقَصْعَةَ الصَّحِيحَةَ لِلرَّسُولِ، وَحَبَسَ الْمَكْسُورَةَ} رَوَاهُ الْبُخَارِيُّ.وَالتِّرْمِذِيُّ، وَسَمَّى الضَّارِبَةَ عَائِشَةَ، وَزَادَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {طَعَامٌ بِطَعَامٍ، وَإِنَاءٌ بِإِنَاءٍ} وَصَحَّحَهُ.
919. இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியர்களில் ஒருவருடன் இருந்தபோது, அவர்களின் மற்றொரு மனைவி தன் பணிப்பெண்ணிடம் ஒரு தட்டில் அவர்களுக்காக உணவு கொடுத்தனுப்பினார். அதனை அவர் (நபியின் மனைவி) கையால் தட்டிவிட்டார். அதனால் அந்தத் தட்டு உடைந்தது. இறைத்தூதர்(ஸல்) அந்தத் தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் போட்டு ``இதனைச் சாப்பிடு!'' என்றார்கள். பின்னர் கொண்டு வந்தவரிடம் ஒரு நல்ல தட்டைக் கொடுத்து விட்டு உடைந்த தட்டை வைத்துக் கொண்டார்கள்.
நூல்கள்: புகாரீ, திர்மிதீ
திர்மிதீயில், ``உடைத்தவர் ஆயிஷா(ரலி) என்றும் ``உணவுக்குப் பதில் உணவு, பாத்திரத்திற்குப் பதில் பாத்திரம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்றும் `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
920. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ، فَلَيْسَ لَهُ مِنَ الزَّرْعِ شَيْءٌ، وَلَهُ نَفَقَتُهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.وَيُقَالُ: إِنَّ الْبُخَارِيَّ ضَعَّفَهُ.
920. ``பிறரின் பூமியில் (நிலத்தில்) அவரின் அனுமதி இன்றிப் பயிரிடுபவருக்கு அதிலிருந்து எதுவும் கொடுக்கப்படாது. அவர் செலவிட்டுள்ள அளவு மட்டுமே கொடுக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ராஃபிவு இப்னு கதீக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் புகாரீ(ரஹ்) இதனை `ளயீஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.