3.
மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
மவ்ளூவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ருக்
எனும் ஹதீஸ்களாகும்.
அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக்
எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிருபிக்கபடாவிட்டாலும் பொதுவாக
அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும்
ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு
என்னவென்றால் மவ்ளூவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்பது சந்தேகமற
நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ருக் என்பதில் பொய்யர் என்பது திட்டவட்டமாக
நிரூப்பிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்ற சந்தேகம்
தெரிவிக்கப்பட்டிருக்கும். இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த
அறிஞரும் மாற்றுக்கருத்து கொள்ளவில்லை.
4. ளயீப் (பலவீனமானது)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்
கூடியவை ளயீப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம்.
சந்தேகத்திற்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.
சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?
உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததை பின்பற்றாதே (அல்குர்ஆன் 17:36) என்று அல்லாஹ்
கூறுகிறான். உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்றுவிடு
என்பது நபிமொழி அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) நூல் : திர்மிதீ, அஹ்மத். ஹாகிம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்ற சந்தேகம் வந்தால் அதை பின்பற்றுவது
தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.
பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள்
சேர்ந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது. அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம்
ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீபின் வகை
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ) அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கீழ்கண்ட விதமாக ளயீபான ஹதீஸ்களை வகைப்படுத்தலாம்.
i.முர்ஸல்
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர்
குறிப்பிட்டோம். எல்லா அறிவிப்பாளர்களையும் சரியாகக் கூறிவிட்டு நபித்தோழரை மட்டும்
கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக்காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக்
கொள்வோம்.
ஹன்னாத் - வகீவு - இஸ்ராயில் - ஸிமாக் - முஸ்அப் - நபிகள் நாயகம் என்ற சங்கிலித்
தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு
விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து
நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தாபியீன்களைச்
சேர்ந்த முஸ்அப் கூறுகிறார்.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முர்ஸல் எனும் தரத்திலமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களுக்கிடையே
கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய
மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள்
என்ற முறையில் சில தவறுகள் செய்திருக்ககூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள்
நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித் தோழர்களை அல்லாஹ்வும்
புகழ்ந்து பேசுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான்
கூறவேண்டும். ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித் தோழர்தான் நம்பகமற்றவர் எனக்
கூறவேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித் தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம்
செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர
உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம் இந்த ஹதீஸில் நபித்தோழர்
தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ மற்ற விபரமோ தெரியவிட்டாலும்
விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர்
தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக
இருப்பதால் - இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த வாதம் பாதிதான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர்
தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக்
கேட்டிருக்கலாம். அந்தத் தாபியீ நபித்தோழரிடம் கேட்டிருக்கலாம். இதற்கு சாத்தியம்
உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக்
கூறமுடியாது. ஒரு தாபியீயும் நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.
அந்த தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்
அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை.
எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியீயுமோ விடுபட்டிருக்க
வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு
சாரார் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.
ஒரு நம்பகமான தாபியீ நான் எந்த ஸதீஸையும் நபித்தோழர் வழியாகவே அறிவிப்பேன் என்று
அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸலை ஆதாரமாகக் கொள்ளலாம் எனக் கூறினால் அதை
ஏற்கலாம். ஆனால் எந்த தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.
ii முன்கதிவு (தொடர்பு அறுந்தது)
நபித்தோழர் விடுபட்டிருந்தால் அல்லது நபித்தோழர் தான்
விடுபட்டிருக்கிறார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்றோம். வேறு
அறிவிப்பாளர்கள் இடையில் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாக
சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்பார்கள்.
உதாரணத்துக்கு திர்மிதீயின் அந்த முதல் ஸதீஸையே எடுத்துக் கொள்வோம்.
ஹன்னத் - வகீவு - இஸ்ராயீல் - ஸிமாக் - முஸ்அப் - இப்னு உமர் - நபிகள் நாயகம்.
இதில் சிமாக் என்பவர் முஸ்அபியிடம் செவியுறவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
முஸ்அபிடம் இதைச் செவியுறவில்லையானால் முஸ்அபிடம் யார் செவியுற்றாரோ அவரிடமிருந்து
இதைச் செவியுற்றிருப்பார் ஆனால் அவரைக் குறிப்பிடவில்லை என்பது இதன் பொருள்.
இதைப்புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம். 2000ஆவது வருடத்தில் 40 வயதில்
காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அவர் பொய் சொல்லாத
நம்பிக்கைகுரியராகவும் இருக்கிறார். காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி
கூறியதாகத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.
இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள்
உள்ளன.
ஒருவரிடமிருந்து மற்றவர் அறிவிக்கிறார் என்றால் இருவரது வரலாற்றையும் ஆராய்வதன்
மூலம் இதைக்கண்டு பிடித்துவிடலாம்.
A என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120ல் மரணித்து விட்டார்.
B என்ற அறிவிப்பாளர் 120ல்
பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். A என்பவர் Bயின் வழியாக ஒரு செய்தியை
அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக்
கண்டுபிடித்து விடலாம்.
A மக்காவில் வாழ்ந்தார் B எகிப்தில் வாழ்ந்தார்.
A ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.
B ஒரு போதும் மக்கா செல்லவில்லை. வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும்
வரலாற்றுக் குறிப்பு இல்லை. ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த
நிலையில் A என்பார் B வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை
அறிந்திருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
A 120 வருடம் இறந்தார். B 115ல் பிறந்தார். இப்போது
A யிடமிருந்து B அறிவித்தாலும்
இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் A
மரணிக்கும் போது B யின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.
A யிடமிருந்து B அறிவிக்கும் என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்கு
மூலம் தருகிறார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டுபிடித்து விடலாம்.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய
முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்ககூடும் அல்லது நினைவாற்றல்
இல்லாதவராக இருக்ககூடும்.
iii) முஃளல்
ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்றனர். முஃளல் என்றால்
ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.
ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ளமுடியாது என்றால் பலர்
விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
iv) முஅல்லக்
ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.
வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.
உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையுமில்லாமல் நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று
திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.
அல்லது உதாரணத்துக்கு நாம் எடுத்துக் கொண்ட முதல் ஹதீஸில் ஹன்னாதை மட்டும் விட்டு
விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான்
ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர்
வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் கூறுவார்.
இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக்
கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர்பு இருக்கிறதா? என்று தேடிப்பார்க்க வேண்டும்.
வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அதற்கு
அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுச்
செயல்படலாம்.
அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததலால் அதை விட்டு
விட வேண்டும்.
ஆ) அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரை கவனத்தில்
கொண்டு ளயீபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
i) ஷாத்
அரிதானது என்பது இதன் பொருள்.
ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று
வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்தப் பத்துப் பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கிறார்கள். ஒன்பது
பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒரே ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது
பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று
கூறுவர்.
தொழுகையில் நான்கு தடவை நபி(ஸல்) கைகளை உயர்த்தினார்கள் என்று ஹதீஸை உதாரணத்திற்காக
எடுத்துக் கொள்வோம்.
இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப், ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே
இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை
உயர்த்தவில்லை என்கிறார்.
நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றாக ஒருவர் அறிவிக்கும் போது
அது ஷாத் என்னும் நிலையை அடைகிறது.
இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவுள்ளன. இரண்டில் ஏதேனும்
ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?
மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு அதிகமான வாய்ப்புகள்
உள்ளன. எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டுவிட வேண்டும்.
நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது.
அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள்
ஹதீஸ்களைக் கற்றுள்ளனர் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, முஸா பின்
ஹாருன், ஹஸன் பின் சுஃப்யான், ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். எல்லோரும்
அறிவிப்பதற்கு மாற்றாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்று
வகையில் சேரும்.
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர்களின் பெயர்களைப்
பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.
ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த
ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயில் பின் முஹம்மத் என்று மூன்று பேர்
குறிப்பிடுகிறார்கள். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகிறார்.
ஒரே ஆசிரியிடமிருந்து அறிவிக்கும் இந்தப் பெயர் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட
பெயருக்கு மாற்றாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் தான். மூவர்
குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது.
அதாவது மூன்றாவது அறிவிப்பாளர்களாக குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத்
பலவீனமானவராகவுள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவராக இல்லை என்று
வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும்
விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட
வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே
இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா
என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்துவிடும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த
ஹதீஸ் பலவீனமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராவார்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு.
இவர் பலவீனராகவுள்ளதால் இந்த அறிவிப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆசிரியிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு
மாற்றமாக - முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச்
சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதையும் நாம் ஏற்கலாம். ஏற்கவேண்டும்.
“முதல் ரக்அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள்.” என்பது ஒரு ஆசிரியிர் வழியாக
நால்வரின் அறிவிப்பு.
“முதல் ரக்அத்தில் இக்லாஸும் இரண்டாவது ரக்அத்தில் நாஸ் அத்தியாத்தையும்
ஓதினார்கள்” என்று ஒருவர் அறிவிக்கிறார்.
இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக
ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகிறது. இவரும்
நம்பகமானவராகவுள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
பலபேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதரணமான
நிகழ்வுதான்.
இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.
ஒரு ஆசிரியிர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாக பலரும் பல விதமாக
அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.
நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் ஒருவர் குதைபா
வழியாக அதற்கு மாற்றாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில்
ஒருவர் அறிவிப்பது தவறு, நால்வர் அறிவிப்பது சரி எனக்கூறமுடியாது. ஏனெனில்
உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவர்களிடம் தான்
முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை அறிவிக்கிறார். அந்த
நால்வர் தமது ஆசிரியரிடம் செவியுற்றதை அறிவிக்கிறார்கள்.
எனவே இதை ஷாத் எனக் கூறமுடியாது. முரண்பாடாகக் கூறி இவர்களது இரு ஆசிரியர்களின்
தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற
முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் அறிவிப்பது ஒரு
விதமாகவும் ஒருவர் அறிவிப்பது அதற்கு முரணாகவும் இருந்தால் அதை ஷாத் என்றோம். பலர்
அறிவிக்கிறார்களே அதற்கு ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இதை மஹ்பூள் எனக்
கூறுவார்கள். ஒரு ஹதீஸைப்பற்றி மஹ்பூள் எனக் கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் ஒரு
அறிவிப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக்
கொள்ளத்தக்கதாகும்.
ii) முன்கர் (நிராகரிக்கப்பட்டது)
ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கிறார்களோ
அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத்
என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக - நினைவாற்றல் குறைவானவராக அந்த
ஒருவர் இருந்துவிட்டால் அது முன்கர் எனப்படும்.
ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதற்கு மாற்றமாக அதே
ஆசிரியர் வழியாக மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் நம்பகமானவர்களாகவும் அந்த
ஒருவர் பலவீனமானவராகவும் உள்ளார் என்பது பொருளாகும். ஷாத் என்ற நிலையில் அமைந்த
ஹதீஸ்களையே ஆதாரமாகக்கூட கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த
ஹதீஸ்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
இப்னுஸ் ஸலாஹ் போன்ற அறிஞர்கள் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு
பெயர்கள் என்று கூறுகின்றனர்.
முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.
அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஜந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஜவரில் நால்வர்
அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கிறார். அந்த நால்வர்
நம்பகமானவர்களாக இருப்பது போல இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர்
அறிவிப்பது முன்கர் என்போம் அந்த நால்வர் அறிவிப்பது தான் மஃரூஃப். மஃரூஃப் என்பது
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.