-4-

இ) அறிவிக்கப்படும் விதத்தை கவனத்தில் கொண்டு ளயீபான ஹதீஸ்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

i) முதல்லஸ்
பலவீனமான ஹதீஸ்களில் முதல்லஸ் என்பது ஒருவகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்த கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பர்ப்போம்.

1. நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்ஸாரி அறிவித்தார்.
2. மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினார்.
3. மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.
4. நமக்கு குதைபா அறிவித்தார் என்று மாலிக் பின் அனஸ் கூறினார்.
5. குதைபா, மாலிக் வழியாக அறிவித்தார்.
6. மாலிக், ஸுஹைல் பின் அபீஸாலிக் வழியாக அறிவித்தார்.
7. ஸுஹைல் பின் ஆபீ ஸாலிஹ், தம் தந்தை அபூ ஸ்லிஹ் வழியாக அறிவித்தார்.
8. அபூஸாலிஹ், அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.
9. அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.

இது திர்மிதீயின் நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஒன்பது நபர்களின் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.

இந்தப்பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்!

ஆரம்பத்தில் நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார் என்று கூறப்படுகிறது. இமாம் திர்மிதீ நேரடியாக இஸ்ஹாக் இடம் கேட்டிருந்தார் என்பது நமக்கு அறிவித்தார் என்ற வாசக அமைப்பிலிருந்தே விளங்குகிறது.
இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடம் நேரடியாக அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகிறது. எல்லோருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர்.

ஆனால் ஐந்தாவதாக “குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்” என்று தான் கூறப்பட்டள்ளது.
இந்த வாசக அமைப்பை பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்.

குதைபா நேரடியாகவே மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கை கூறியிருக்கலாம்.

இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகிறோம். அபூ ஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று.

இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொருத்தே ஹதீஸின் தரம் முடிவாகும்.

குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து கொள்ளலாம்.

இடையில் ஒருவரை அவர் விட்டிருந்தால் அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் இருக்கலாம்.
எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லை? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது.
இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது.

குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத்தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்க முடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படாது.

மாலிக் வழியாக குதைபா என்பதை “மாலிக் நமக்கு அறிவித்தார்” என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார். நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம். (குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்துக்குத் தான் இவ்வாறு கூறினோம்.)

இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகிறார் என்றால் ஆசிரியரை விட்டு விட்டு ஆசிரியரின் ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் வருகிறது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தான் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தத்லீஸ் எனப்படும்.

இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக்கூடும்.

ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரை கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதிஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும்.

ஒரு நபர் சில நேரங்களில் தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரை கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர் குறிப்பிட்ட ஒரு ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைபிடிக்கவில்லை. மாறாக நமக்கு இவர் அறிவித்தார் என்று தெளிவாக அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இவர் முதல்லிஸ் (தக்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் விட்டு விட வில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்க்கலாம்.

ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.
இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

ii) முஅன்அன்
அன் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது முஅன்அன் எனப்படும்.

அன் அபீ ஹுரைரா - அன் ஆயிஷா (அபூஹுரைரா வழியாக - ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடப்படும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.

நமக்குச் சொன்னார், நமக்கு அறிவித்தார், நம்மிடம் அறிவித்தார், நான் காதால் அவரிடம் செவியுற்றேன் என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக - இவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கு நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொருத்த வரை வித்தியாசம் இல்லை.

அவர் தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்கவேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம் அவ்வாறு நிரூபிக்கபடாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

iii) முத்ரஜ் (இடைச் செருகல்)
ஹதீஸின் அறிவிப்பாளர் ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுதுண்டு.

இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இந்த நேரத்தில் இதை ஓது என்று நபி (ஸல்) கூறியதைக் தெரிவித்து விட்டு இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.

இத்தகைய இடைச் செருகல் உள்ள ஹதீஸ்களை முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபி (ஸல்) கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.

மற்றொரு அறிவிப்பைப் பார்த்து இடைச் செருகலைக் கண்டுபிடிக்கலாம்.

அல்லது இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்பத்தில் இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ வைத்துக் கூறுவதைக் கண்டுபிடிக்கலாம்.

அல்லது இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத்தக்க வகையில் அதன் கருத்து அமைந்துள்ளதை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

அல்லது இத்துறையில் தங்களை அர்பணித்துக்கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.

ஈ) வேறொரு விதமாகவும் ளயீபான ஹதீஸ்களை வகைப்படுத்தலாம்.
i) முள்தரப்
இதற்கு குழப்பமானது என்று பொருள்.

முள்தரப் என்பதும் ஏற்கத்தகாத ஹதீஸ்களில் ஒருவகையாகும்.

ஒரு ஆசிரியரிடம் ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அதை ஷாத் என்று ஏற்கனவே நாம் அறிந்தோம்.

முள்தரப் என்பதும் ஒரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட செய்தியை பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றாக சிலர் அறிவிக்கிறார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வழியாக இப்படி அறிவிக்கிறார்கள் என்றால் தான் முள்தரப் எனப்படும்.

ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கிறார்கள் என்றால் இருவர் அறிவிப்பது முள்தரப் எனப்படும்.

இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும், மதினாவிலும் இருவேறு சந்தர்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ ஆதாரமோ உள்ளதா? என்று பார்க்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் முள்தரப் எனக் கூறக்கூடாது.

முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.

ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறிவிட்டு இன்று மதீனாவில் நடந்தாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நடந்த தவறு) தான்.

கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.

இப்றாஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல் காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் கூடும் என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.

ii) மக்லூப் (மாறாட்டம்)
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாக கூறிவிடுவோம். உள்ளதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை எனக் கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில பேர் பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும் உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.

கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியர் இடத்தில் மாணவரையும் மாணவர் இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.

iii) மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)
ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்தாக நம்பகமானவர் கூறுகிறார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப்பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

இவர் மஜ்ஹுல் எனப்படுவார். அல்லது இப்படி ஒருவர் இருந்தாகக் தெரிகிறது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவரும் மஜ்ஹுல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்குத் தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

உ) யாரைப் பற்றிய செய்தி என்பதை பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்படும்.
யாருடைய சொல், யாருடைய செயல், யாருடைய அங்கீகாரம் அறிவிக்கப்படுகிறது என்று அடிப்படையிலும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்களை சம்பந்தப்பட்டதை மர்பூவு என்றும், நபித்தோழர்கள் சம்பந்தப்பட்டதை மவ்கூஃப் என்றும், அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்டதை மக்தூவு என்றும் கூறப்படும்.

இதை விரிவாக காண்போம்.

i) முஸ்னத், மர்ஃபூவு
முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்பது பொருள். மர்ஃபூவு என்றால் “சேரும் இடம் வரை சேர்ந்து” என்று பொருள்.
முஸ்னத் என்பதும் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்தியா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறுப்பட்டது தான்.

முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ, ஒருவரோ நம்பிக்கைக்குரியரவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாததாக ஆகிவிடும்.

மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னத் போன்றதுதான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.

நபி(ஸல்) கூறியதாக - செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அதை முஸ்னத் என்பர். மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தபட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கியமான நிபந்தனையாகும்.
மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்படவேண்டும். மர்ஃபூவு எனக் கூறியவுடன் அதை அப்படியே ஏற்கக் கூடாது.

ii) மவ்கூஃப்
தடைப்பட்டு நிற்பது என்பது பொருள்.

சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்ற பெயரால் குறிப்பிடப்படும்.

இப்பெயர் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பை தான் ஹதீஸ்கள் எனப்படும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று அறிவிக்கப்படுகிறது. இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தபட்டதாகக் கூறப்படவில்லை. இவ்வாறு அமைந்தவை மவ்கூஃப் எனப்படும்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நம்பகமானவர்களாக இல்லாவிட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியிருக்க முடியாது என்று கருதிக் கொள்ளலாம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் மார்க்கத்தின் ஆதாரமாக ஆக முடியம். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது.

சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.

“நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்.”

“எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டிருந்தது” என்பது போன்ற வாசகங்களைப் பயன் படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்குத் மார்க்க கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.

நபி (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபி (ஸல்) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக்கூடாது என பல அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளனர்.

மவ்கூஃபூக்கு எதிராகப் பயன் படுத்தப்படும் சொல் முஸ்னத் என்பதாகும்.
முஸ்னத் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) சம்பந்தப்படாத செய்தி என்று பொருள்.

iii) மக்தூவு (முறிக்கப்பட்டது)
நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்களை மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஹதீஸ்களை வகைப்படுத்தியது போலவே எத்தனை பேர் வழியாக ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது என்ற அடிப்படையிலும் ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர்.

ஊ) இவை அல்லாமல், எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டள்ளன.

i) முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
ஒரு செய்தியை ஒருவர் இருவர் அல்ல, ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவாதிர் எனக்கூறுவர்.

மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.

நம்பகமான ஒருவர் மூலம் ஒரு ஹதீஸ் கிடைக்கிறது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கிறீர்கள். அந்த ஒரு லட்சம் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதாவாதிர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்கள் ஒருவர் வழியாகத் தான் அதை அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் வழியாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவாதிர் எனலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை ஏராளமான நபித் தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு இந்த செய்தி நம்மை வந்து அடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்த செய்தியை அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கிறார்கள். இது தான் முதவாதிர் எனப்படும்.

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவாதிரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும் “யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டி கூறுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித் தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறை தோறும் எண்ணற்றவர் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

ii) ஹபருல் வாஹித் (தனிநபர் அறிவிப்பது)
இவ்வாறு அமையாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.

இதையும் பல வகையாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹூர், கரீப், அஸீஸ், என்று இதைப் பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.

இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட வகையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.

எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவைதவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.

ஆதாரநூற்கள
இந்த விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவி, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல், ஆகிய நூற்களே இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.