பக்கம் - 10 -
4) நான்காம் முறை நபி இப்றாஹீம் (அலை) மக்கா வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயீல் (அலை) ஜம்ஜம் கிணற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைபடுத்திக் கொண்டிருந்தார்கள். தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். இப்பயணத்தில்தான் இருவரும் இணைந்து கஅபத்துல்லாஹ்வைக் கட்டி, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை அல்லாஹ் வழங்கினான். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1) நாபித் (நபாயூத்), 2) கைதார், 3) அத்பாஈல் 4) மிபுஷாம், 4) மிஷ்மாஃ, 6) தூமா, 7) மீஷா, 8) ஹுதத் 9) தீமா, 10) யதூர், 11) நஃபீஸ், 12) கைதுமான்.
பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின. இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர். யமன், சிரியா, மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர். சில காலங்கள் கழித்து இவர்களில் பலர் அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர். நாளடைவில் நாபித், கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய்விட்டது.
ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவரின் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி ‘பத்ரா’ என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம் (உர்துன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழங்கால நகரமாகும். இவர்களின் அரசாட்சிக்கு பணிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர். இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர். இந்த நாபித்தின் வமிசத்திற்கு ‘நிபித்தி வமிசம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிரியாவில் ஆட்சி செய்த கஸ்ஸான் வமிசத்து அரசர்களும் மதினாவில் வசித்த அவ்ஸ், கஸ்ரஜ் வமிசத்தினரும் இந்த நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என வமிச ஆய்வாளர்களின் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த பலர் அந்த ஊர்களில் இன்றும் வசிக்கின்றனர். இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் யமன் நாட்டு தொடர்பு (உறவு) என்று ஒரு பாடத்தை குறிப்பிட்டுள்ளார். அப்பாடத்தில் தலைப்புக்கு பொருத்தமான சில நபிமொழிகளை எழுதி, தனது கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார்.
ஹதீஸ் கலை (நபிமொழி) வல்லுனர் இப்னு ஹஜரும் தனது விரிவுரையில், கஹ்தான் வமிசத்தினர் நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையே ஏற்றமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன் கைதான் குடும்பத்தினர் பல காலங்கள் மக்காவில் வாழ்ந்தனர். அவரது சந்ததியில் அத்னானும் அவர் மகன் மஅதும் பேரும் புகழும் பெற்றவர்கள். இவர்களிலிருந்து அத்னானிய அரபியர்கள் தோன்றினர். இவர்களையடுத்து பிற்காலத்தில் இவரது சந்ததியில் தோன்றியவர்கள், அத்னான் வரை தங்களது மூதாதைகளின் பெயர்களை சரியாக மனனமிட்டு பாதுகாத்துக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறையில் இந்த அத்னான் என்பவர் 21-வது தலைமுறை பாட்டனாராவார்.