சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும்போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக் கொண்டு, “இதற்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்து விட்டனர்” என்று கூறுவார்கள்.
இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர். எனினும், அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் பல மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர். அக்கருத்துகளை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகளும் உள்ளன.
“அத்னான் மற்றும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன” என்று பிரபலமான வரலாற்று அறிஞர் இப்னு ஸஅது (ரஹ்) கூறுகிறார். இக்கால அறிஞர்களில் பெரும் ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பவரும் இக்கருத்தையே சரிகாண்கிறார். மேலும், இமாம் தபரி மற்றும் மஸ்வூதி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுள்ளார்கள்.
மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின. (மஅதுக்கு ‘நஜார்’ என்ற ஒரு மகன் மட்டும்தான் இருந்தார் என்று சிலர் கூறியுள்ளனர்.)
நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூலம் பெரியவமிசங்கள் தோன்றின. 1) இயாத், 2) அன்மார், 3) ரபீஆ, 4) முழர்.
இக்கோத்திரங்களைப் பற்றியுள்ள விவரங்களின் வரைபடத்தை பக்கத்தில் பார்க்கவும்.