பக்கம் - 12 -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் ‘கினானா’ குடும்பத்தைத் தேர்வு செய்தான். கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களில் (மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்) மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னைப் படைத்தான். பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன். குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன். (ஸஹீஹ் முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான். பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி அவற்றில் குடும்பத்தாலும் ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான். (ஜாமிவுத் திர்மிதி)
அத்னான் சந்ததியினருடைய எண்ணிக்கை பல்கிப் பெருகியபோது அவர்கள் மழை வளம், பசுமை, செழிப்புமிக்க இடங்களைத்தேடி அரபு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அப்து கைஸ், பக்ரு இப்னு வாயில் மற்றும் தமீம் ஆகிய சந்ததியினர் பஹ்ரைனிலும், ஹனீஃபா இப்னு அலீ இப்னு பக்ர் குடும்பத்தினர் ‘யமாமா’ சென்று அங்குள்ள ‘ஹுஜ்ர்’ பகுதியிலும் குடியேறினர். (ஹுஜ்ர் என்பது யமாமாவின் ஒரு நகரமாகும்.) பக்ர் இப்னு வாயிலின் ஏனைய குடும்பங்கள் யமாமா, பஹ்ரைன், ஸைஃப் காளிமா, அதன் அருகாமையிலுள்ள கடற்பகுதி, இராக்கின் கிராமப்புறங்கள் ஆகிய இடங்களில் குடியேறினர்.
தங்லிப் குடும்பத்தவர்கள் ‘ஃபுராத்’ நதிக்கரையில் குடியேறினர். அவர்களில் ஒரு பிரிவினர் பக்ர் குடும்பத்தாருக்கு அருகில் வசித்தனர். பனூ தமீம் குடும்பத்தவர்கள் பஸராவிலும் அதன் கிராமப் பகுதிகளிலும் வசித்தனர்.
சுலைம் குடும்பத்தினர் மதீனாவுக்கு அருகாமையில் வசித்தனர். அவர்கள் வாதில் குராவிலிருந்து கைபர்வரை, மதீனாவின் கிழக்குப் பகுதி, அதன் இரு மலைப்பகுதிகள் மற்றும் ஹர்ரா வரை வசித்தனர்.
அஸத் குடும்பத்தினர் ‘தீமாஃ’ நகரத்தின் கிழக்குப் பகுதிலும் ‘கூஃபா’ நகரத்தின் மேற்குப் பகுதியிலும் வசித்தனர். அவர்களுக்கும் தீமாஃவுக்குமிடையே ‘தய்ம்’ கோத்திரத்தைச் சேர்ந்த புஹ்த்துர் குடும்பத்தவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. அவ்வூருக்கும் கூஃபாவுக்கு மிடையில் ஐந்து நாட்களுக்கு உரிய நடைதூரம் இருந்தது. திப்யான் குடும்பத்தவர்கள் தீமா முதல் ஹவ்ரான் நகரம் வரையிலும் கினானாவின் சந்ததியினர் ‘திஹாமா’ பகுதியிலும் வசித்தனர். மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குறைஷி குடும்பத்தவர்கள் வசித்தனர். அவர்கள் ஒற்றுமை இன்றி பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். குஸய்ம் இப்னு கிலாப் அவர்களை ஒருங்கிணைத்து குறைஷியருக்கென தனிப்பெரும் சிறப்புகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தந்தார்.