பக்கம் - 148 -
“நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அல்லாஹ்வை புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். அவன் நேர்வழி காட்டியோரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டுவிட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு இணையானவர் எவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாவார் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று மொழிந்தார்கள்.

இதைக் கேட்ட ழிமாத் “நீங்கள் சொன்ன வாக்கியங்களை எனக்குத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அவருக்கு இதைக் கூறினார்கள். அதற்கு அவர் “நான் ஜோசியக்காரர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் பேச்சையெல்லாம் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய வாக்கியங்களைப் போன்று இதற்குமுன் நான் ஒருபோதும் கேட்டதில்லை இவை எவ்வளவு கருத்தாழமுள்ள வாக்கியங்களாக இருக்கின்றன் உங்களது கையைக் கொடுங்கள் நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறேன்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஆறு மேன்மக்கள்

நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு கி.பி. 620 ஜூலை ஹஜ்ஜுடைய காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி சில புதிய நல்ல இளஞ்செடிகளைக் கண்டது. அந்த இளஞ்செடிகள் வெகு விரைவில் நிழல் தரும் அடர்த்தியான மரங்களாக மாறின. அதன் நிழல்களின் கீழ் முஸ்லிம்கள் அநியாயம் மற்றும் கொடுமைகளின் அனலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறே சிறிது சிறிதாக வரலாற்றுப் பாட்டை மாறிக்கொண்டே சென்றது.

மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை பொய்ப்பித்து வந்ததாலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுத்து வந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பகலில் சந்திக்காமல் இரவில் சந்தித்து வந்தார்கள்.

ஓரவு அபூபக்ர், அலீ (ரழி) ஆகியோருடன் மக்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற நபி (ஸல்) அவர்கள் துஹல், ஷைபான் ஆகியோர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களிடத்தில் இஸ்லாமைப் பற்றி பேசினார்கள். அப்போது அபூபக்ருக்கும் துஹல் கிளையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் மிக அழகிய உரையாடலும், அற்புதமான கேள்வி பதில்களும் நடைபெற்றன. ஷைபான் கிளையினர் நல்ல ஆதரவான பதில்களை கூறியபோதும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. (ஸீரத்துர் ரஸூல்)

அடுத்து நபி (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.

அவர்கள்,

1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)

2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)

3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)

4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)

5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)

6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)