பக்கம் - 159 -
அங்கு வந்த உஸைத் அவருக்கருகில் நின்றுகொண்டு “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்! எங்களில் எளியோர்களை ஏமாற்றவா? உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள்” என்று கோபமாகப் பேசினார். அதற்கு முஸ்அப் அவரிடம் “நீங்கள் அமர்ந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் விரும்பாவிட்டால் விட்டுவிடுங்கள்!” என்று கூறவே உஸைத் “நீங்கள் சொல்வது சதான்!” என்று கூறித் தனது ஈட்டியை நட்டுவைத்து அதற்கருகில் உட்கார்ந்து கொண்டார்.
முஸ்அப் (ரழி) உஸைதுக்கு இஸ்லாமின் விளக்கங்களை கூறி குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே உஸைதின் முகத்தில் மாற்றத்தை, அதாவது, இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவரும் கண்டனர். இதைக் கேட்டதற்குப் பிறகு உஸைத் “ஆஹா! இது எவ்வளவு அழகிய உரைநடையாக இருக்கின்றது. இம்மார்க்கத்தில் சேர விரும்பினால் நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவ்விருவரும் “நீங்கள் குளித்து, தூய்மையான ஆடை அணிந்து ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ என மொழிந்து, பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும்” என்று கூறினார்கள். உஸைத் எழுந்துச் சென்று குளித்து, தூய்மையான ஆடை அணிந்துகொண்டு இஸ்லாமை ஏற்று, இரண்டு ரகஅத் தொழுதார். பிறகு கூறினார் “எனக்குப் பிறகு ஒருவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பின்பற்றி உங்களது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அவரது கூட்டத்தினர் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். அவர்தான் ஸஅது இப்னு முஆத். அவரை உங்களுக்கு நான் காட்டுகிறேன்” என்று கூறினார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு ஸஅது இப்னு முஆதிடம் சென்றார். ஸஅது தனது கூட்டத்தாருடன் சபையில் அமர்ந்திருந்தார்.
உஸைதை பார்த்த ஸஅது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. இங்கிருந்து செல்லும்போதிருந்த அவருடைய முகம் அவர் திரும்ப வரும்போது இல்லையே” என்று கூறினார்.
சபையில் வந்துநின்ற உஸைதிடம் “உஸைதே! அங்கு சென்று என்ன செய்தாய்?” என்று ஸஅத் கேட்டார். அதற்கு உஸைத், தான் இஸ்லாமைத் தழுவியதை வெளிப்படுத்தாமல் “நான் அவ்விருவரிடமும் பேசினேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்விருவரிடமும் எந்தத் தவறையும் நான் காணவில்லை. இருப்பினும் நான் அவர்களை அவர்களது செயல்களிலிருந்து தடுக்கவும் செய்தேன். அதற்கு அவ்விருவரும் எனது விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்வதாக கூறினார்கள்” என்றார்.
மேலும், “ஹாரிஸா கூட்டத்தார் உங்களுடன் உள்ள உடன்படிக்கையை முறிக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் சிறிய தாயின் மகனான அஸ்அதை கொலை செய்யச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.” என்று ஸஅதிடம் உஸைத் கூறினார். இதைக் கேட்டவுடன் ஸஅத் சினமடைந்தவராக தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு அவ்விருவரிடம் வந்தார்.
அவ்விருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து உஸைத் கூறிய நோக்கத்தைப் ஸஅது புரிந்துகொண்டார். இவர்களின் பேச்சை நான் கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் உஸைத் இவ்வாறு செய்திருக்கிறார் என்று ஸஅத் விளங்கிக் கொண்டார். அவர்களுக்கருகில் நின்றுகொண்டு அஸ்அத் இப்னு ஜுராராவைப் பார்த்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபூ உமாமாவே! உனக்கும் எனக்கும் உள்ள உறவின் காரணத்தால்தான் நீ இவ்வாறு செய்வதற்கு துணிந்திருக்கிறாய்! உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்!! எங்களது வீட்டிற்கு வந்து எங்களுக்கு விருப்பமற்ற முறையில் நடந்து கொள்கிறாயா?” என்று கேட்டார்.