பக்கம் - 160 -
அஸ்அத் இப்னு ஜுராரா இதற்கு முன்பு ஸஅத் இப்னு முஆதைப் பற்றி முஸ்அபிடம் கூறியிருந்தார். அதாவது முஸ்அபே! நம்மிடம் வருகிற இவர் தனது கூட்டத்தின் தலைவர். இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவரது சமூகத்தினர் அனைவரும் ஒருவர் கூட பின்வாங்காமல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். முஸ்அப் (ரழி) அவர்கள் அமைதியாக “ஸஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். சரி! என்று கூறி தனது ஈட்டியை நட்டுவைத்து ஸஅத் அமர்ந்துகொண்டார். முஸ்அப் (ரழி) அவருக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்திக் குர்ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசிப்பதை அனைவரும் கண்டனர்.
பிறகு ஸஅது, இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ எனக் கூறி இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று கூறினார்கள். உடனே அவரும் அவ்வாறே செய்தார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு தனது சமூகத்தினர் அமர்ந்திருந்த சபைக்கு வந்தார். அவரைப் பார்த்த அவன் சமூகத்தினர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று பேசிக்கொண்டனர்.
ஸஅத் சபைக்கருகில் வந்து “அப்துல் அஷ்ஹல் கிளையினரே! என்னைப் பற்றி உங்களது கருத்தென்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “நீங்கள் எங்கள் தலைவர் எங்களில் சிறந்த அறிவாளி; எங்களில் மிக பாக்கியம் பெற்றவர்” என்று கூறினர். அப்போது அவர் “நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கும் வரை நான் உங்களில் எந்த ஆண்களிடமும், பெண்களிடமும் பேசமாட்டேன்” என்று கூறினார். அன்று மாலைக்குள் அவரது கூட்டத்தினல் உஸைம் என்பவரைத் தவிர அனைத்து ஆண்களும் பெண்களும் முஸ்லிமாகிவிட்டனர். உஸைம் உஹுத் போர் நடந்தபோதுதான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். தொழும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே போரில் கலந்துகொண்டு வீர மரணம் அடைந்தார். இதனால் அவரைப் பற்றி “மிகக் குறைவாக அமல் செய்தார். ஆனால், அதிகமான நன்மையை அடைந்து கொண்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அஸ்அத் இப்னு ஜுராராவின் வீட்டில் தங்கி முஸ்அப் (ரழி) இஸ்லாமின் அழைப்புப் பணியை செய்து கொண்டிருந்தார். மதீனாவாசிகளில் பெரும்பாலானவர்களின் இல்லங்களில் இஸ்லாம் நுழைந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும் பெண்களுமாக பலர் இஸ்லாமைத் தழுவியிருந்தனர். ஆனால், உமைய்யா இப்னு ஜைத், கத்மா, வாயில் ஆகிய குடும்பத்தினர் மட்டும் இஸ்லாமை ஏற்கவில்லை. இவர்கள் அவர்களது இனத்தைச் சேர்ந்த ‘கைஸ் இப்னு அல் அஸ்வத்’ என்ற பிரபல கவிஞன் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் அம்மக்களை இஸ்லாமை ஏற்கவிடாமல் தடுத்திருந்தார். ஆனால், அவர்களும் பிற்காலத்தில் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடைபெற்ற ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு இஸ்லாமைத் தழுவினர்.
நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ஹஜ்ஜுடைய காலம் தொடங்கும் முன்பே மாபெரும் சாதனை! வெற்றி!! என்ற நற்செய்தியை எடுத்துக்கொண்டு முஸ்அப் (ரழி) மக்கா திரும்பினார். நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவாசிகளின் செய்திகள், அவர்களின் சிறந்த பண்புகள், அவர்களுக்கு இருக்கும் ஆற்றல்கள், மன உறுதி ஆகியவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். (இப்னு ஹிஷாம்)