பக்கம் - 170 -
2) சுஹைப் இப்னு ஸினான் ரூமி: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரா சென்றபின் இவர் ஹிஜ்ரா செல்ல முனைந்தபோது குறைஷிக் காஃபிர்கள் இவரைச் சுற்றி வளைத்து “ஏ சுஹைபே! நீ எங்களிடம் பிச்சைக்கார பரதேசியாக வந்தாய். எந்த செல்வத்தையும் நீ கொண்டு வரவில்லை. ஆனால், எங்களிடம் வந்தவுடன் செல்வச்செழிப்பு ஏற்பட்டு கொழுத்து விட்டாய். இப்போது நீ உனது செல்வத்துடன் சென்றுவிடலாம் என்று நினைக்கிறாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது ஒருக்காலும் நடக்காது” என்று கூறினர். அதற்கு சுஹைப் (ரழி) “நான் எனது செல்வத்தை உங்களுக்குத் தந்துவிட்டால் என்னை விட்டு விடுவீர்களா?” என்று கேட்டதற்கு அவர்கள் “ஆம்!” என்றனர். “நான் எனது செல்வத்தை உங்களுக்குத் தந்துவிட்டேன்” என்று கூறி சுஹைப் (ரழி) மதீனாவுக்கு தப்பி வந்துவிட்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது “சுஹைப் லாபமடைந்தார்! சுஹைப் இலாபமடைந்தார்!” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
3) உமர் இப்னுல் கத்தாப், அய்யாஷ் இப்னு அபூ ரபீஆ, ஹிஷாம் இப்னு ஆஸ் இப்னு வாயில் (ரழி) இம்மூவரும் ‘சஃப்’ என்ற இடத்திற்கு மேலுள்ள “தனாழுப்” என்ற இடத்திற்கு வந்து காலையில் அங்கிருந்து ஹிஜ்ரா செய்வோம் என்று முடிவு செய்துகொண்டனர். ஆனால் உமர், அய்யாஷ் (ரழி) இருவர் மட்டும் அங்கு வந்தனர். ஹிஷாம் அங்கு வரவில்லை.
உமரும், அய்யாஷும் மதீனாவுக்கு வந்து குபாவில் தங்கினர். அப்போது அபூ ஜஹ்லும், அவனது சகோதரன் ஹாஸும் அய்யாஷைத் தேடி அங்கு வந்துவிட்டனர். இம்மூவரும் தாய்வழி சகோதரர்கள் ஆவர். இவர்களது தாயின் பெயர் ‘அஸ்மா பின்த் முகர்பா.’ அங்கு வந்த அபூ ஜஹ்லும், ஹாஸும் அய்யாஷை நோக்கி “அய்யாஷே! உன்னைப் பார்க்கும் வரை தலை வாரமாட்டேன் வெயிலிலிருந்து நிழலில் ஒதுங்கமாட்டேன் என்று உன் தாய் நேர்ச்சை (சத்தியம்) செய்துவிட்டார்” என்று கூறினர். தாயின்மீது இரக்கம் கொண்ட அய்யாஷ் வந்தவர்களுடன் திரும்பிச் செல்வதற்குத் தயாராகிவிட்டார். அப்போது உமர் (ரழி) அவரிடம் “அய்யாஷே! உங்கள் கூட்டத்தார் உங்களை இஸ்லாமிலிருந்து திருப்பி விடத்தான் முயற்சிக்கின்றனர். எனவே, நீ அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்! நான் கூறுவதைக் கேள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! பொடுகு, பேன்களால் உனது தாய்க்கு தொந்தரவு ஏற்படும்போது அவர் தலைவாரிக் கொள்வார் மக்காவில் வெயில் கடுமையாகி விட்டால் கண்டிப்பாக அவர் நிழலுக்குச் சென்றுவிடுவார் எனவே, நீ இவர்களுடன் செல்ல வேண்டாம்” என உமர் (ரழி) அவருக்கு உபதேசம் செய்தார்.
இருப்பினும் அய்யாஷ் “என் தாயின் சத்தியத்தை நிறைவேற்ற நான் சென்றே ஆக வேண்டும்” என்று கூறினார். அதற்கு உமர் (ரழி) “சரி! நீ செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எனது இந்த ஒட்டகத்தை எடுத்துக்கொள்! இது புத்திசாலியான, பணிவான ஒட்டகமாகும். அதன் முதுகிலிருந்து நீ கீழே இறங்கிவிடாதே. உனது கூட்டத்தினர் மூலம் உனக்கு ஏதாவது ஆபத்து என்று தெரிந்தால் இதன் மூலம் நீ தப்பித்துக் கொள்” என்று அவரிடம் கூறினார். அய்யாஷ் உமர் (ரழி) கொடுத்த ஒட்டகத்தில் அவ்விருவருடன் சென்று கொண்டிருந்த போது வழியில் அவரிடம் அபூஜஹ்ல் “எனது தாயின் மகனே! எனது இந்த ஒட்டகத்தில் பயணம் செய்வது எனக்குக் கடினமாக இருக்கிறது. எனவே, என்னை உனது வாகனத்தில் ஏற்றிக் கொள்” என்று கூறினான். இதைக் கேட்ட அய்யாஷ் “சரி!” என்று கூறினார். தனது ஒட்டகத்தைப் பூமியில் படுக்க வைக்கவே அதே நேரத்தில் அவ்விருவரும் இவர் மீது பாய்ந்து இவரைக் கட்டிவிட்டனர். பிறகு கட்டப்பட்ட நிலையில் மக்காவுக்கு அழைத்துச் சென்றனர். அபூஜஹ்லும், ஹாஸும் மக்காவாசிகளைப் பார்த்து “ஓ மக்காவாசிகளே! இதோ பாருங்கள். நாங்கள் இந்த முட்டாளிடம் நடந்துகொண்டது போன்றே நீங்களும் உங்களது முட்டாள்களுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)