பக்கம் - 171 -
ஹிஷாம், ஐய்யாஷ் (ரழி) ஆகிய இருவரும் இணைவைப்போரிடம் கைதிகளாகவே சில காலங்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் ஐய்யாஷையும் ஷாமையும் இணைவைப்போரிடமிருந்து காப்பாற்றி யார் இங்கு அழைத்து வர முடியும்? என்று தங்களது தோழர்களிடம் விசாரித்தார்கள். அல் வலீத் இப்னு அல் வலீத் (ரழி) என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக நான் அவர்களைக் காப்பாற்றி அழைத்து வருகிறேன்” என்றார். அதற்குப் பிறகு அல் வலீத் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் புகுந்து அவ்விருவரும் கைது செய்யப் பட்டிருக்கும் இடத்தை அறிந்துகொண்டார். அவ்விருவரும் மேல் முகடற்ற ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் மாலை நேரம் ஆனவுடன் சுவர் ஏறிக் குதித்து அவ்விருவரின் விலங்கை உடைத்தெறிந்து விட்டு தனது ஒட்டகத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு நலமுடன் மதீனா வந்து சேர்ந்தார். (இப்னு ஹிஷாம்)
யாராவது ஹிஜ்ரா செய்து செல்கிறார்கள் என்று இணைவைப்போர் தெரிந்துகொண்டால் இவ்வாறுதான் அவர்களைத் தடுத்து, அவர்களுக்கு நோவினை செய்து வந்தனர். இவ்வளவு சிரமங்கள் இருந்தும் முஸ்லிம்கள் தனித்தனியாக ஒருவர் பின் ஒருவராக மதீனாவை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தனர். அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பின் மூன்று மாதங்களுக்குள் முஸ்லிம்கள் பலர் மக்காவைவிட்டு ஹிஜ்ரா செய்துவிட்டனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களது கட்டளையின்படி தங்கியிருந்த அபூபக்ரும், அலீயும் இன்னும் நிர்பந்தத்தில் இருந்த முஸ்லிம்கள் மட்டும்தான் மக்காவில் தங்கியிருந்தனர். நபி (ஸல்) ஹிஜ்ரவிற்குண்டான முழு தயாரிப்பும் செய்திருந்தார்கள். எனினும், அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரழி) அவர்களும் பிரயாணத்திற்கு உண்டான முழு தயாரிப்பும் செய்திருந்தார்கள். (ஜாதுல் மஆது)
ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) முஸ்லிம்களிடம் “எனக்கு நீங்கள் ஹிஜ்ரா செய்ய வேண்டிய இடம் (மதீனா) கனவில் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். இதைக்கேட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரா சென்றுவிட்டனர். ஹபஷாவிற்கு சென்றிருந்த முஸ்லிம்களும் மதீனாவிற்கு திரும்பி விட்டனர். அபூபக்ர் (ரழி) மதீனாவிற்கு செல்ல தயாரானபோது அவர்களிடம் நபி (ஸல்) “சற்று தாமதியுங்கள். எனக்கும் அனுமதி கிடைக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! நீங்கள் அதை ஆதரவு வைக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்று கூறியவுடன் அபூபக்ர் (ரழி) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காகத் தன் பயணத்தைத் தள்ளி வைத்தார். பிறகு தன்னிடமிருந்த இரண்டு ஒட்டகங்களை நல்ல முறையில் தீனி கொடுத்து வளர்த்தார்கள். இந்த உரையாடலுக்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து இருவரும் மதீனா புறப்பட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)