பக்கம் - 18 -
இ) ஷாம் நாடு (ஸிரியா)
அரபியர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து கொண்டிருந்த காலத்தில் குழாஆ கோத்திரத்தின் ‘பனூ ஸுலைஹ் இப்னு ஹுல்வான்’ குடும்பத்தினர் ஷாம் நாட்டின் ‘மஷாஃப்’ என்ற பகுதிகளில் குடியேறினர். ‘ழஜாம்மா’ எனப் பிரபலமடைந்த ‘ழஜ்அம் இப்னு ஸலீஹ்’ என்ற பிரிவினர் மேற்கூறப்பட்ட பனூ ஸுலைஹ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாலைவனங்களில் வழிப்பறி செய்து கொண்டிருந்த கிராமத்து அரபியர்களைத் தடுக்கவும், பாரசீகர்களை எதிர்க்கவும் ழஜாம்மாக்களை ரோமர்கள் பயன்படுத்தினர். அதற்காக அவர்களில் ஒருவருக்கு அரச பதவியும் வழங்கினர். பல ஆண்டுகள் இவர்களது குடும்ப ஆட்சி தொடர்ந்தது. இவர்களில் ‘ஜியாது இப்னு ஹபூலா’ என்பவர் புகழ்பெற்ற அரசராவார்.
ழஜாம்மாவினன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதிவரை நீடித்தது. அதற்கு பிறகு கஸ்ஸானியர், ழஜாம்மாவினர் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். இதைக் கண்ட ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார். (இது குறித்த மேல் விவரங்களை தபரி, இப்னு கல்தூன், மஸ்ஊதி, இப்னு குதைபா, இப்னுல் அஸீர் ஆகிய நூல்களில் காணலாம்.)
ஈ) ஹி ஜாஸ் பகுதியில் அதிகாரம்
இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களின் வாழ்நாள் வரை மக்கா நகரின் தலைவராகவும் இறையில்லமான கஅபாவின் நிர்வாகியாகவும் இருந்தார்கள். அவர்கள் 137வது வயதில் மரணமடைந்தார்கள். (ஸிஃப்ருத் தக்வீன், தபரி)
இஸ்மாயீல் (அலை) அவர்கள் 130வது வயதில் மரணமானார்கள் என்ற ஒரு கூற்றும் கூறப்படுகிறது. (தப, யாகூபி)
இஸ்மாயீல் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவர் மக்காவை நிர்வகித்தார் என்றும், சிலர் முதலாவதாக நாபித் பிறகு கைதார் என இருவரும் நிர்வகித்தனர் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்குப் பின் அவ்விருவரின் தாய்வழி பாட்டனாரான முழாழ் இப்னு அம்ர் ஜுர்ஹுமி தலைவரானார். இவ்வாறு இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஜுர்ஹும் கோத்திரத்துக்கு தலைமைத்துவம் மாறியது. ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது தந்தையுடன் இறையாலயத்தை கட்டியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பரம்பரையினருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. எனினும் தலைமைத்துவம் மற்றும் அதிகாரத்தில் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் இருக்கவில்லை. (இப்னு ஹிஷாம்)
நாட்கள் நகர்ந்தன. காலங்கள் கடந்தன. இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளின் நிலைமைகளை எடுத்துக் கூறுமளவுக்கு பெரிதாக இல்லை. ‘புக்த் நஸ்ர்’ என்ற மன்னன் தோன்றுவதற்குச் சிறிது காலம் முன்பு ஜுர்ஹும் கோத்திரத்தினர் முற்றிலும் நலிந்துவிட்டனர். அக்காலத்தில் மக்காவில் அத்னான் வமிசத்தவன் அரசியல் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. புக்துநஸ்ருக்கும் அரபியர்களுக்குமிடையே ‘தாத் இர்க்’ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் அரபியப் படையின் தளபதியாக ஜுர்ஹும் கோத்திரத்தினர் இருக்கவில்லை. மாறாக, இப்படைக்கு அத்னான் தளபதியாக இருந்தார். (தபரி)