பக்கம் - 19 -
பிறகு புக்து நஸ்ர் கி.பி. 587ல் இரண்டாவது முறையாக போர் தொடுத்தபோது அத்னானியர்கள் யமன் நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலர்களின் நபியான ‘யர்மியாஹ்’ அவர்களின் தோழர் ‘பர்கியா’ என்பவர் அத்னானின் மகன் ‘மஅத்“தை ஷாம் நாட்டிலுள்ள ஹர்ரான் நகருக்கு அழைத்துச் சென்றார். புக்து நஸ்ருடைய காலத்துக்குப் பின் மஅத் மக்கா திரும்பினார். அங்கு ஜுர்ஹும் கோத்திரத்தில் ‘ஜவ்ஷம் இப்னு ஜுல்ஹுமா’ என்பவர் மட்டுமே மீதமிருந்தார். அவரது மகளை மஅத் மணந்து கொண்டார். இருவருக்கும் நஜார் என்பவர் பிறந்தார். (தபரி, ஃபத்ஹுல் பாரி)
ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் மிக மோசமடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயினர். கஅபாவை தரிசிக்க வந்தவர்களை இம்சித்து கஅபாவின் செல்வங்களையும் சூறையாடினர். (தபரி)
இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. குஜாஆ கோத்திரத்தினர் மக்காவுக்கு அருகிலுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் குடியேறியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மீது அத்னானியர்கள் கொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக் கொண்டனர். அத்னானியர்களின் ஒரு பிரிவினரான ‘பனூ பக்ரு இப்னு அப்து மனாஃப்’ குடும்பத்தாரின் உதவியுடன் குஜாஆவினர் ஜுர்ஹும் கோத்திரத்தார் மீது போர் தொடுத்து, அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களது ஆட்சியே மக்காவில் நீடித்தது.
ஜுர்ஹும் கூட்டத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஜம்ஜம் கிணற்றை அடையாளம் தெரியாத வகையில் பல பொருள்களைப் போட்டு நிரப்பி மறைத்து விட்டனர். வரலாற்றாசிரியரான இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:
‘;அம்ர் இப்னு ஹாஸ் இப்னு முழாழ் ஜுர்ஹுமீ’ என்பவர் கஅபாவிலிருந்த இரண்டு தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் ஜம்ஜம் கிணற்றினுள் போட்டு மூடிவிட்டார். அவரும் அவரைச் சேர்ந்த ஜுர்ஹும் கோத்திரத்தாரும் யமன் நாட்டுக்குச் சென்று குடியேறினர். மக்காவை விட்டுப் பிந்ததையும் அதன் அதிகாரம் கை நழுவிப் போனதையும் எண்ணி அவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
இது குறித்து அம்ர் இக்கவிதையை பாடினார்:
ஹஜூன், ஸஃபா இடையே நேசருமில்லை
மக்காவில் இராக்கதை பேசுபவரும் இல்லை
மாறாக, நாங்களே அங்கு வசித்து வந்தோம்;
ஆனால் எங்களை காலங்களின் மாற்றங்களும்
ஆபத்து நிறைந்த விதிகளும் அழித்துவிட்டன. (இப்னு ஹிஷாம், தபரி)