பக்கம் - 193 -
அதில் மிக முக்கியமானது அப்போதைய முஸ்லிம்களின் நிலைமை. அவர்கள் இரு வகையினராக இருந்தனர்.
ஒரு சாரார் தங்களது சொந்த பூமியில் சொந்த வீட்டில் சொத்து, சுகங்களுடன் இருந்தனர். இவர்களுக்கு ஒரு சராச மனிதனுக்குரிய கவலையைத் தவிர வேறு கவலை இருக்கவில்லை. இவர்கள்தான் மதீனாவாசிகளான அன்சாரிகள்! இந்த மதீனாவாசிகளுக்கிடையில் கடுமையான பகைமையும், சண்டையும் இருந்து வந்தது.
மற்றொரு சாரார் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்). அவர்களுக்குச் சொந்த நாடும் இல்லை சொந்த வீடும் இல்லை வாழ்வதற்குண்டான எந்த வாழ்வாதாரமும் அவர்களுக்கில்லை தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இவர்களது எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு வருக்கும் மக்காவை விட்டு மதீனாவில் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு நாளும் முஹாஜிர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மதீனாவில் செல்வ வளங்களும் அதிகம் இல்லாததால் மதீனாவின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்தது.
இந்த சிரமமான நெருக்கடியான நேரத்தில் இஸ்லாமிற்கு விரோதமான சில சக்திகள் முஸ்லிம்களுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. இதனால் மதீனாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களும் வருவாய்களும் குறைந்தன. நெருக்கடி மிகுந்த சிரமமான சூழ்நிலைகள் உருவாயின.
இரண்டாவது வகையினர், மதீனாவின் பூர்வீகக் குடிமக்களில் உள்ள முஷ்ரிக்குகள்! (இணைவைப்பவர்கள்). இவர்களிடம் முஸ்லிம்களை ஆதிக்கம் செலுத்துவதற்கான எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவர்களது உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றி பல சந்தேகங்கள் இருந்தன. தங்களது மூதாதையர்களின் மதத்தை விட்டுவிடுவது தங்களுக்கு உகந்ததா? என்று யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எந்தவிதமான விரோதத்தையும், குரோதத்தையும், சூழ்ச்சியையும் தங்களது உள்ளங்களில் மறைத்திருக்கவில்லை. சில காலங்கள்தான் இவ்வாறு கழிந்திருக்கும். அதற்குள் இவர்களும் இஸ்லாமைத் தழுவி தங்களது வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே ஆக்கிக் கொண்டார்கள்.
இவர்களில் சிலர் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக விரோதம் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் முஸ்லிம்களை எதிர்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. சூழ்நிலைகளைக் கருதி முஸ்லிம்கள் மீது தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக் கொண்டனர். இவர்களில் மிக முக்கியமானவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனாவான். “புஆஸ்’ என்ற யுத்தம் நடந்ததற்குப் பின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு கிளையினரும் சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவரை நியமித்துக் கொள்ள ஆலோசனை செய்தனர். அதன்படி அப்துல்லாஹ் இப்னு உபைய்யை தங்களது தலைவராக ஆக்கலாம் என்று முடிவு செய்திருந்த சமயத்தில், நபி (ஸல்) மதீனாவிற்கு வந்துவிட்டதால் மதீனாவாசிகள் இவனைக் கைவிட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர்.
எனவே, நபி (ஸல்) அவர்கள்தான் தனது தலைமைத்துவத்தை பறித்துக் கொண்டார் என்று அவர்களின் மீது மிகவும் கோபமாக இருந்தான். இருந்தாலும் சூழ்நிலைகளைக் கருதியும் எஞ்சியிருக்கும் கண்ணியத்தையும் இழந்துவிடுவோம் என்ற பயத்திலும் பத்ர் போருக்குப் பின்பு, தான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக அறிமுகப்படுத்தினான்.