பக்கம் - 194 -
ஆனால், உள்ளத்தில் நிராகரிப்பையே மறைத்து வைத்திருந்தான். நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். இவன் தலைவனானால் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கலாம் என்று நப்பாசை கொண்டிருந்த இவனது தோழர்களும் இவனின் தீய திட்டங்கள் நிறைவேற இவனுக்கு உறுதுணையாக நின்றனர். சில நேரங்களில் சில வாலிபர்களையும், சில அப்பாவி முஸ்லிம்களையும் தங்களது தீய திட்டத்தை நிறைவேற்று வதற்காக யாரும் அறிந்து கொள்ளாத வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

மூன்றாம் வகையினர் யூதர்கள். உண்மையில் இவர்கள் இதற்கு முன் நாம் கூறியவாறு அஷ்வர் மற்றும் ரோமர்கள் காலத்தில் தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளால் ஹிஜாஸில் குடியேறினர். இவர்கள் இப்ரானி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரபு பிரதேசத்திற்கு வந்ததால் தங்களது உடை, மொழி, கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டார்கள். தங்களது பெயர்களையும், தங்களது குலத்தின் பெயர்களையும் அரபியப் பெயர்களைப் போன்று மாற்றிக் கொண்டனர். தங்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், தங்களது இனவெறியை மட்டும் தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.
(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (எந்தவித குறைவுமின்றி அதை) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) “பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்த போதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை” என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால் அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:75)

யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. மாறாக, ஜோசியம் பார்ப்பது, சூனியம் செய்வது, மந்திரிப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்றவற்றையே தங்களது குலத்தொழிலாகவும் மதச் சடங்காகவும் செய்தனர். இந்தச் செயல்களின் மூலம் தாங்களே கல்விமான்கள், ஆன்மீகத் தலைவர்கள், சிறப்பிற்குரியவர்கள் என்று கருதினர்.

பொருளீட்டும் வழிகளில் மிகுந்த திறமை பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள் தானியங்கள், பேரீத்தங்கனி, மது வகைகள், துணிமணிகள் என அனைத்து வியாபாரங்களையும் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஆடைகளையும், வித்துக்களையும், மது வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, மதீனாவிலிருந்து பேரீத்தம் பழங்களை ஏற்றுமதி செய்தனர். மேலும் பல தொழில்களும், வியாபாரங்களும் அவர்கள் கைவசம் இருந்தன.