பக்கம் - 196 -
அரபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடும். தங்களது சதித்திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தங்களது வியாபாரங்கள் நலிந்துவிடும். தங்களின் பொருளாதாரத்தின் மூலதனமாகிய வட்டித் தொழிலை இழந்து விடுவோம் என்று யோசித்தனர். மேலும், இந்த அரபியர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் வட்டியின் மூலம் அவர்களிடமிருந்து நாம் அபகரித்த சொத்துகளையும், தோட்டங்களையும், நிலங்களையும் மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர்.

இதைப் பற்றி ஒரு சம்பவத்தை உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரழி) அறிவிக்கிறார்கள்:

ஸஃபியா (ரழி) கூறுகிறார்கள்: நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை:”இவர் அவர்தானா?” (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை:”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம்!”

சிறிய தந்தை:”அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?”

எனது தந்தை:”ஆம்!”

சிறிய தந்தை:”அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?”

எனது தந்தை:”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உயிரோடு இருக்கும் காலம்வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.” இவ்வாறு ஸஃபிய்யா (ரழி) யஹூதியாக இருந்தத் தனது தந்தையின் மன நிலையைப் பற்றி விவரிக்கிறார்கள். (இப்னு ஹிஷாம்)

இதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோது நடந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் பெரிய யூதப் பாதிரியாராக இருந்தார். நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரிடம் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அந்தக் கேள்விகளின் பதிலை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய பதில்களைச் சரியாகக் கூறியதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அதே இடத்தில், அதே சமயத்தில் நபி (ஸல்) அவர்களை ஏற்று இஸ்லாமைத் தழுவினார். பின்பு அவர் நபி (ஸல்) அவர்களிடம் “யூதர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசக்கூடியவர்கள். நான் இஸ்லாமைத் தழுவியது அவர்களுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி அவதூறு கூறுவார்கள். எனவே, நான் மறைந்து கொள்கிறேன், என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் விசாரியுங்கள்” என்றார்.