பக்கம் - 197 -
நபி (ஸல்) யூதர்களை வரவழைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அறைக்குள் மறைந்து கொண்டார். யூதர்கள் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “எங்களில் மிக அறிந்த மார்க்க மேதை. மேலும், எங்களில் மிக அறிந்த மார்க்க மேதையின் மகனாவார். அவர் எங்களில் மிகச் சிறந்தவர் எங்களில் மிகச் சிறந்தவன் மகனாவார். (அவர் எங்களின் தலைவர், எங்களின் தலைவன் மகனாவார். அவர் எங்களில் மிக மேலானவர் மிக மேலானவன் மகனாவார். அவர் எங்களில் மிக உயர்ந்தவர் மிக உயர்ந்தவன் மகனாவார்)” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) “அப்துல்லாஹ் இப்னு ஸலாம் முஸ்லிமாகிவிட்டால் நீங்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிவீர்கள்” என்றார்கள். அதற்கு யூதர்கள் “அல்லாஹ் அதிலிருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று இரண்டு அல்லது மூன்று முறைக் கூறினார்கள். அப்போது அறையிலிருந்து வெளியேறி “அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறினார். இதனைக் கேட்ட யூதர்கள் “இவன் எங்களில் மிகக் கெட்டவன், மேலும், கெட்டவனின் மகன்” என்றனர். மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: அறையில் இருந்து வெளியேறிய அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) யூதர்களைப் பார்த்து “ஓ! யூத சமூகமே! வணக்கத்திற்குரிய ஏக இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையான மார்க்கத்தையே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார். அதற்கு அந்த யூதர்கள் “இல்லை நீ பொய் கூறுகிறாய்” என்று கூறினர். (ஸஹீஹுல் புகாரி)
இது நபி (ஸல்) மதீனாவில் நுழைந்த முதல் நாளிலேயே யூதர்களிடம் பார்த்த முதல் அனுபவமாகும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த உள்நாட்டு விவகாரங்களும், நிலைமைகளும் ஆகும்.
முஸ்லிம்களின் வெளி விவகார பிரச்சனைகளாவன: மதீனாவைச் சுற்றி குறைஷிகளின் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் இருந்தனர். குறைஷிகள்தான் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தனர். முஸ்லிம்கள் மக்கா குறைஷிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்தபோது ஏறக்குறைய பத்து ஆண்டுகள் முஸ்லிம்களை மிகக் கடுமையாக துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வந்தனர். மிகுந்த நெருக்கடியையும், தடைகளையும் ஏற்படுத்தினர். மனரீதியான போராட்டத்தை அவர்கள் மீது திணித்தனர். பல பழிகளையும் பொய் பிரச்சாரங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தனர். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்தவுடன் அவர்களின் சொத்துகளையும், வீடுகளையும், நிலங்களையும் பறிமுதல் செய்தனர். ஹிஜ்ரா சென்றுவிட்ட முஸ்லிம்களின் குடும்பத்தினரை மதீனாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். மற்றும் பலரை வேதனை செய்தனர். இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டனர். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சியையும் குறைவின்றி செய்தனர். ஆனால், முஸ்லிம்கள் தங்களைவிட்டு தப்பித்து 500 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு வளமிக்க பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்றவுடன் அதை சகித்துக்கொள்ள முடியாத குறைஷிகள், முஸ்லிம்களுக்கு எதிராக தங்களின் அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களைத் தீட்டினர்.